விளையாட்டு

டெல்லி கிரிக்கெட் சங்கம் கண்டுகொள்ளாத போது விராட் கோலியை தேர்வு செய்தது நான்: அடுல் வாசன் திடீர் பேட்டி

செய்திப்பிரிவு

டிடிசிஏ கண்டுகொள்ளாமல் இருந்த போது விராட் கோலி, இஷாந்த் சர்மா டெல்லி அணிக்கு ஆடியே ஆக வேண்டும் என்று கொண்டு வந்தது நான் தான் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அடுல் வாசன் தெரிவித்துள்ளார்.

கலீஜ் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

விராட் கோலி என்னுடைய அகாடமியிலிருந்து வந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? 11 வயதாக இருக்கும் போது கோலி எங்களிடம் வந்தார். எனவே ஜூனியர் கிரிக்கெட் நாட்களிலிருந்து நான் அவரைப் பார்த்து வருகிறேன், அவரையும் இஷாந்த் சர்மாவையும் டெல்லி அணிக்காக தேர்வு செய்ய வைத்தது நான்.

இந்தியா யு-19 அணிக்கு அவர்கள் ஆடிக் கொண்டிருந்தனர் என்பதால் அவர்களை டெல்லி ரஞ்சி அணிக்கு எடுக்க டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகம் தயக்கம் காட்டி வந்தனர். நான் அவர்களுக்காக வாதாடினேன், டெல்லி ரஞ்சி அணியில் இடம் கிடைத்தது. இருவரும் ஒரே போட்டியில் அறிமுகமானார்கள். மீதி வரலாறு.

விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா என்னுடைய சிறந்த நண்பர். நாங்கள் இருவரும் சேர்ந்துதான் அகாடமி தொடங்கினோம், கோலியிடம் பேசினோம், அவர் எங்களை கூர்ந்து கவனித்தார். அதன் பிறகு அவரது கவனம் அபாரமானது.

அவர் ஆக்ரோஷமாக களத்தில் இருப்பதாக பலரும் உணரலாம். ஆனால் அவர் தன் திறமை மீது உண்மையான நம்பிக்கை வைத்திருப்பவர், களத்தில் இறங்கும்போதெல்லாம் வெற்றி பெறுவதைத்தான் அவர் உண்மையில் விரும்புவார்.

இவ்வாறு கூறினார் அடுல் வாசன்.

SCROLL FOR NEXT