விளையாட்டு

பில்பாவ் மாஸ்டர்ஸ் செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன்

செய்திப்பிரிவு

ஸ்பெயினின் கிராணடாவில் நடைபெற்ற பில்பாவ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

விஸ்வநாதன் ஆனந்த் உள்பட 4 வீரர் உள்பட பங்கேற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு வீரரும் தலா இருமுறை மோதினர். இதில் ஆர்மேனியாவின் லெவோன் அரோனியனிடம் மட்டும் ஆனந்த் தோல்வியடைந்தார்.

எனினும் 6 சுற்றுகள் முடிவில் 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் அவர் 11 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். ஆனந்தை வென்றபோதிலும் அரோனியன் 10 புள்ளிகளை மட்டுமே பெற்றதால் 2-வது இடம் பெற்றார்.

ரஸ்லன் போனோமரிவ், வலேஜோ பொன்ஸ் ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டனர்.

5–வது முறையாக இந்த போட்டியில் பங்கேற்ற ஆனந்த் இப்போதுதான் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அடுத்ததாக நவம்பரில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக உலக சாம்பியன்ஷிப் இரண்டாவது போட்டியில் ஆனந்த் விளையாட இருக்கிறார். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கார்ல்சன் ஆனந்தை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT