17-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது இரண்டாவது தங்கத்தை வென்றுள்ளது. ஆடவர் வில்வித்தை இறுதிப் போட்டியில் தென் கொரியாவை வென்றதன் மூலம் இந்தியா தங்கத்தை கைப்பற்றியது. அதே நேரத்தில் மகளிர் வில்வித்தையில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
இந்தியாவின் அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான் மற்றும் சந்தீப் குமார் ஆகியோர் அடங்கிய அணி, தென் கொரியாவை 227-225 என்ற கணக்கில் இறுதிப் போட்டியில் வென்றது. முன்னதாக, இந்தியாவின் ஜிது ராய் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்று தந்தார்.
முன்னதாக த்ரிஷா தேப், பூர்வத்சா ஷிண்டே மற்றும் சுரேகா ஜோதி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி, வில்வித்தையில் இரானை 224-215 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. இதற்கு முன் அரையிறுதியில், வெறும் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் வில்வித்தை அணி சீனாவிடம் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.