விளையாட்டு

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பிரணாய் சாம்பியன்

செய்திப்பிரிவு

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவர் வென்ற முதல் சர்வதேச பட்டமாகும்.

இந்தோனேசியாவின் பேலம்பேங் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரணாய் 21-11, 22-20 என்ற நேர் செட்களில் இந்தோனேசிய வீரர் அப்துல் கோலிக்கை தோற்கடித்தார். 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பிரணாய் எளிதாக வென்றபோதிலும், பின்னர் நடைபெற்ற 2-வது செட்டை கடும் போராட்டத்துக்குப் பிறகே கைப்பற்றினார்.

வெற்றி குறித்துப் பேசிய பிரணாய், “இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. கிராண்ட்ரீ போட்டியில் பட்டம் வெல்வேன் என ஒருபோதும் நினைக்கவில்லை. கடந்த வாரம் நடைபெற்ற வியட்நாம் ஓபனின் இறுதிச்சுற்றில் தோல்வி கண்டது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

இந்தோனேசிய ஓபனில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அது சரியாக நடந்தது. நான் மிகவும் களைப்படைந்துவிட்டேன். ஆனாலும் ஒவ்வொரு நாளும் வெற்றி பெற வேண்டும் என என்னை நானே ஊக்கப்படுத்திக் கொண்டேன். அதனால் நான் நம்பிக்கையோடு விளையாடினேன். அதேவேளையில் எனக்கு கொஞ்சம் பதற்றமும் இருந்தது” என்றார்.

SCROLL FOR NEXT