விளையாட்டு

ஷரபோவாவை வெளியேற்றினார் வோஸ்னியாகி

செய்திப்பிரிவு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை வென்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி. நியூயார்க்கின் ஆர்தர் ஆஷ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில் 6-4, 2-6, 6-2 என்ற செட்களில் வோஸ்னியாகி வெற்றி பெற்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 5 முறை பட்டம் வென்றவரும், 2006-ல் அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவருமான ஷரபோவாவின் சவால் 4-வது சுற்றுடன் முடிவுக்கு வந்தது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஷரபோவா சாம்பியன் பட்டம் வென்றார். எனவே இந்த போட்டியில் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

காலிறுதி ஆட்டத்தில் இத்தாலியின் சாரா எர்ரானியை வோஸ்னியாகி எதிர்கொள்ள இருக்கிறார். அமெரிக்க ஓபனில் 2009-ம் ஆண்டு இறுதி ஆட்டம் வரை முன்னேறிய வோஸ்னியாகி, 2010, 2011-ம் ஆண்டுகளில் அரையிறுதியுடன் வெளியேறினார். கடந்த இரு ஆண்டுகளாக அவரால் 3-வது சுற்றை தாண்ட முடியாத நிலை இருந்தது.

ஷரபோவா போன்ற தலைசிறந்த வீராங்கனையை நான் வென்றுவிட்டேன் என்பது என்னால் கூட நம்ப முடியாத விஷயம்தான் என்று வெற்றி குறித்து வோஸ்னியாகி கருத்துதெரிவித்துள்ளார்.

காலிறுதியில் போபண்ணா ஜோடி

அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்துக்கு இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஸ்லோவேகியாவின் கேத்ரீன் ரிபோத்னிக் ஜோடி முன்னேறியுள்ளது.

இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயின் – தென்னாப்பிரிக்க ஜோடியான மெடினா – ராவின் ஜோடியை போபண்ணா இணை வீழ்த்தியது. காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்ஷா – பிரேசிலின் புருனோ சோரஸ் ஜோடியை போபண்ணா இணை எதிர்கொள்ள இருக்கிறது.

SCROLL FOR NEXT