ஆசிய விளையாட்டுப் போட்டியின் 6-வது நாளில் இந்தியாவுக்கு துடுப்பு படகுப் போட்டியில் இரு வெண்கலப் பதக்கங்களும், துப்பாக்கி சுடுதலில் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளன. இதுதவிர ஆடவர் வில்வித்தையில் வெள்ளிப் பதக்கமும், ஸ்குவாஷில் இரு வெண்கலப் பதக்கங்களும் உறுதியாகியுள்ளன.
தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 6-வது நாளான நேற்று மகளிர் டபுள் டிராப் அணி பிரிவு துப்பாக்கி சுடுதலில் சாகுன் சவுத்ரி, ஸ்ரேயாஸி சிங், வர்ஷா வர்மன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 279 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றது.
அதேநேரத்தில் இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடுதல் வீரர்களான ககன் நரங், குருபிரீத் சிங், மஹாவீர் சிங், சமரேஷ் ஜங் உள்ளிட்டோர் வெறுங்கையோடு திரும்பினர். ஆடவர் 50 மீ. ரைபிள் புரோன் பிரிவில் 14-வது இடத்தைப் பிடித்த ககன் நரங், தகுதிச்சுற்றோடு வெளியேறினார். ஜாய்தீப் குமார் 10-வது இடத்தையும், ஹரிஓம் சிங் 29-வது இடத்தையும் பிடித்தனர்.
துடுப்பு படகில் இரு வெண்கலம்
துடுப்பு படகுப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்திய ராணுவ வீரரான ஸ்வரண் சிங் விர்க் 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். 2,000 மீ. ரேஸில் ஸ்வரண் சிங் 7 நிமிடம், 10.65 விநாடிகளில் இலக்கை எட்டினார். முன்னாள் வாலிபால் வீரரான ஸ்வரண் சிங், வெள்ளிப் பதக்கம் வென்ற தென் கொரிய வீரர் கிம் டாங்யாங்குடன் கடுமையாகப் போராடினார். ஆனால் கடைசியில் ஸ்வரண் சிங் முற்றிலுமாக நீர்ச்சத்தை இழந்ததால் சோர்வடைந்து படகிலிருந்து கடலுக்குள் விழுந்தார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் நலமோடு இருப்பதாக இந்திய துடுப்பு படகு சம்மேளன செயலாளர் ராம் தெரிவித்தார்.
பின்னர் நடைபெற்ற அணி பிரிவு துடுப்பு படகுப் போட்டியில் கபில் சர்மா, ரஞ்சித் சிங், பஜ்ரங் லால் தக்கார், ராபின் சவன் குமார், முகமது ஆசாத், மணீந்தர் சிஹ், தேவிந்தர் சிங், முகமது அஹமது ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
காலிறுதியில் சாய்னா
மகளிர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால் காலிறுதிக்கு முன்னேறினார். அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21-7, 21-6 என்ற நேர் செட்களில் ஈரானின் சோரயா அகேய்ஹஜியாக்காவை தோற்கடித்தார். சர்வதேச தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சாய்னா அடுத்த சுற்றில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் இகனை சந்திக்கிறார்.
மற்றொரு முன்னணி இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 22-20, 16-21, 20-22 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் மானுபுட்டி பெலட்ரிக்ஸிடம் தோல்வி கண்டார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப் 21-6, 21-6 என்ற நேர் செட்களில் ஆப்கானிஸ்தானின் இக்பால் அஹமது ஷாகிப்பை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அத்ரி-சிக்கி ரெட்டி ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய அதேவேளையில், மற்றொரு இந்திய ஜோடியான அக்ஷய் தேவால்கர்-பிரதன்யா காட்ரே ஜோடி தோல்வி கண்டது.
வெள்ளி உறுதி
ஆடவர் காம்பவுண்ட் அணி பிரிவு வில்வித்தைப் போட்டியில் அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான், சந்தீப் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி தங்களின் அரையிறுதியில் 231-227 என்ற கணக்கில் ஈரான் அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது. இறுதிச்சுற்றில் பலம் வாய்ந்த அணியான தென் கொரியாவை சந்திக்கிறது இந்தியா. மகளிர் காம்பவுண்ட் அணி பிரிவு அரையிறுதியில் இந்திய அணி 224-226 என்ற கணக்கில் சீன தைபேவிடம் தோல்வி கண்டது. இன்று நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஈரானை சந்திக்கிறது இந்தியா.
ஸ்குவாஷில் இரு பதக்கம்
ஆடவர் மற்றும் மகளிர் அணி பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது. ஆடவர் அணி பிரிவு போட்டியில் மகேஷ், ஹரிந்தர், சவுரவ் கோஷல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. மகளிர் அணி பிரிவு போட்டியில் தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, அனகா அலங்காமணி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மகளிர் அணி தனது அரையிறுதியில் தென் கொரியாவை சந்திக்கிறது.
மனோஜ் குமார் தோல்வி
ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் தேவேந்திரோ சிங் (49 கிலோ எடைப் பிரிவு) காலிறுதிக்கு முந்தைய சுற்றை உறுதி செய்தார். முன்னதாக அவரை எதிர்த்து விளையாடவிருந்த குவைத் வீரர் பஹாத் போட்டியிலிருந்து விலகினார். இந்தியாவின் முன்னணி வீரரான மனோஜ் குமார் (64 கிலோ) முதல் சுற்றில் 1-2 என்ற கணக்கில் ஜப்பானின் கவாச்சி மஸாட்சுகுவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். டென்னிஸில் இந்திய வீரர்கள் சனம் சிங், யூகி பாம்ப்ரி, வீராங்கனை அங்கிதா ரெய்னா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.