இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் கையில் அணிந்திருந்த கிளவுஸில் ராணுவத்தில் ஒரு பிரிவான பலிதான் ரெஜிமென்டின் முத்திரையை அணிந்திருந்த பிரச்சினையில் ஐசிசி தோனிக்கு அதை அணிய அனுமதி மறுத்ததையடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் ஐசிசியைச் சாடியுள்ளார்.
ஐசிசி விதிமுறைகளின் 2 பிரிவுகளை தோனியின் செய்கை மீறியுள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து ஐசிசி அனுமதியில்லை என்று மறுத்துள்ளது.
இந்நிலையில் டிவி9 பாரத்வர்ஷ் நேர்காணலில் பாஜக எம்.பி.கவுதம் கம்பீர் கூறியதாவது:
ஐசிசியின் வேலை கிரிக்கெட் ஆட்டங்களை நடத்துவதுதான் யார் எதை எங்கு அணிந்திருக்கிறார்கள், என்ன லோகோவை வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதல்ல.
300-400 ரன்கள் எடுப்பதை தடுப்பது எப்படி போன்ற விஷயங்களை ஐசிசி யோசிக்க வேண்டும். ஐசிசி வேலை பவுலர்களுக்காகவும் பிட்ச் அமைப்பதாகும். இந்த ஒட்டுமொத்த தோனி லோகோ விவகாரம் தேவையற்ற முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார் கம்பீர்.