விளையாட்டு

17 சிக்ஸர்களுடன் மோர்கன் காட்டடி சதம்: ஆப்கனை இரக்கமின்றி நசுக்கிய இங்கிலாந்து: ரஷித் கான் பரிதாபம்

க.போத்திராஜ்

எயின் மோர்கனின் இரக்கமற்ற காட்டடி சதத்தால் மான்செஸ்டரி்ல் நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இங்கிலாந்து அணி.

17 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்ளிட்ட 71 பந்துகளில் 148 ரன்கள் சேர்த்து கேப்டன் மோர்கன் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். ஆட்டநாயகன்விருதையும் வென்றார்.

பாவப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி வீரர்களின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தபோது, மோர்கனை ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல் ஆப்கன் வீரர்கள் தவித்தது பரிதாபமாக இருந்தது.

மோர்கன் மட்டுமல்ல, இங்கிலாந்து அணியின் ஜோய் ரூட்(88), பேர்ஸ்டோ(90) ஆகியோரும் தங்கள் பங்கிற்கு ஆப்கானிஸ்தானை வதம் செய்தார்கள்.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் சேர்த்தது. 398 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்து 150 ரன்களில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 5  போட்டிகளில் ஒரு தோல்வி, 4 வெற்றிகள் என மொத்தம் 8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் இ ருக்கிறது.

இங்கிலாந்து கேப்டன் மோர்கனின் ஆட்டத்தை நேற்று ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. மோர்கன் 28 ரன்கள் சேர்த்திருந்தபோது அவருக்கு கேட்சை கோட்டை விட்டனர் ஆப்கானிஸ்தான் வீரர்கள்.

 அந்த கேட்சை நழுவவிட்டதற்கு தண்டனையாக மோர்கன் அடுத்த 45 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் வீரர்கள் வீசும் பந்துகள் சிக்ஸருக்கு பறந்தவாறு இருந்தன. மோர்கன் தான் சந்தித்த ஒவ்வொரு 4 பந்துகளிலும் ஒரு சிக்ஸர் விளாசி திணறடித்தார். 57 பந்துகளில் சதம் அடித்த மோர்கன் ஒருநாள் போட்டியில் தனது 17-வது சதத்தை பதிவு செய்தார்.  இதில் 17 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். பெரும்பாலும் சிக்ஸர்களை மோர்கன் லாங்ஆன்- லாங்ஆப் திசையில்தான் அதிகமாக அடித்தார்.

ஆப்கானிஸ்தானின் நட்சத்திர பந்துவீச்சாளராக வலம் வந்த ரஷித் கான் நிலைமை நேற்று பரிதாபமானது. 9 ஓவர்கள் வீசிய ரஷித்கான் 110 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதில் 11 சிக்ஸர்கள் இவர் ஓவரில்தான் அடிக்கப்பட்டன.

ஆப்கானிஸ்தான் அணியைப் பொருத்தவரை தோல்விக்கு மேல் தோல்வி ஏற்பட்டு நேற்று விரக்தியுடனே விளையாடினார்கள், அதிலும் மோர்கனின் இரக்கமில்லாத பேட்டிங் ஃபார்ம் அவர்களை இன்னும் வேதனைப்படுத்தியது. ஏறக்குறைய 15 முறை பீல்டிங்கை கோட்டை விட்டனர், பல கேட்சுகளை நழுவவிட்டனர். ஆப்கானிஸ்தான் அணிக்கு இருநத் சின்னச் சிறு நம்பிக்கையையும், மோர்கன் நேற்று பேட்டால் நசுக்கிவிட்டார்.

வின்ஸ், பேர்ஸ்டோ ஆட்டத்தை தொடங்கினார்கள். வின்ஸ் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவுடன், ரூட் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி, அதன்பின் அதிரடிக்கு மாறினர். 61 பந்துகளில் பேர்ஸ்டோவும், 52 பந்துகளில் ஜோய் ரூட்டும் அரைசதம் அடித்தனர்.

பேர்ஸ்டோ 3 சிஸ்கர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 99 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 120 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த கேப்டன் மோர்கன், ரூட்டுடன் சேர்ந்தார்.

மெதுவாக ஆடத் தொடங்கிய மோர்கன், அதன்பின் ருத்ரதாண்டவம் ஆடினார். பந்துகள் பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறந்தன. அதிரடியாக ஆடிய மோர்கன் 36 பந்துகளில் அரைசதத்தையும் அடுத்த 21 பந்துகளில் அதாவது 57 பந்துகளும் சதம் அடித்தார்.

 ரூட் 88 ரன்னில் ஆட்டமிழந்தார் 3-வது விக்கெட்டுக்கு ரூட், மோர்கன் கூட்டணி 199 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த  பட்லர்(2), ஸ்டோக்ஸ்(2) ரன்னில் ஆட்டமிழந்தனர். மோர்கன் 1488 ரன்களில் ஆட்டமிழந்தார். மொயின் அலி 31 ரன்னிலும், வோக்ஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

கடைசி 10 ஓவர்களில் மட்டும் இங்கிலாந்து அணி 142 ரன்கள் சேர்த்தது. 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 397 ரன்கள் சேர்த்தது.  ஆப்கானிஸ்தான் தரப்பில் குலாப்தீன் நயிப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

398 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி. மிகப்பெரிய ஸ்கோர் என்பதால், மனரீதியாக நம்பிக்கை இழந்திருந்த ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கிலும் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை.

ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹஸ்மத்துல்லா ஷாகிதி 76 ரன்களும், ரஹ்மத்துல்லா 46, அஸ்கர் அப்கன் 44 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்து ஆப்கானிஸ்தான் 150 ரன்களில் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், ரஷித் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT