கார்டிப்பில் நடைபெற்று வரும் இலங்கை- ஆப்கான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பைப் போட்டியில் முகமது நபியின் ஒரே ஓவரில் இலங்கை இன்னிங்சில் திருப்பு முனை ஏற்பட அந்த அணி 36.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆட்டம் சுமார் 2 மணி நேரங்களுக்கு மேல் மழையால் பாதிக்கப்பட்டதால் ஆட்டம் 41 ஒவர்களாகக் குறைக்கப்பட்டது, இதனையடுத்து இலங்கை 201 ரன்களுக்குஆல் அவுட் ஆனதால் ஆப்கான் அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலக்கு 187 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
92/0 என்று அபாரத் தொடக்கம் கண்டு பிறகு 144/1 என்ற நிலையில் முகமது நபியின் ஒரே ஓவர் இலங்கையின் தலைவிதியை மாற்றி போட்டது. முன்னதாக கருண ரத்னே விக்கெட்டை 30 ரன்களுக்கு வீழ்த்திய நபி, ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளைக் கைபப்ற்ற இலங்கை அணி 146/4 என்று ஆனது.
அதிர்ச்சியடைந்த இலங்கை அணிக்காக உதிரிகள் வகையில் சேர்ந்த ரன்களே இரண்டாவது அதிக எண்ணிக்கையாக இருந்த போது மழை குறுக்கிட்டது.
22வது ஓவரில் முகமது நபி, முதலில் திரிமானேவை 25 ரன்களில் பவுல்டு செய்தார், ப்பிறகு குசல் மெண்டிஸ் ரஹம்த ஷாவிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார், அடுத்ததாக ஆஞ்சேலோ மேத்யூசும் டக் அவுட் ஆகி ஷாவிடம் கேட்ச் ஆனார். மிகப்பிரமாதமான அந்த ஓவரில் இலங்கை அணி அதிர்ச்சியடைந்தது.
இதோடு நிற்காமல் வேகப்பந்து வீச்சாளர் ஹமித் ஹசன், தனஞ்ஜெய டிசிவால்வை விக்கெட் கீப்பர் ஷசாத் கேட்சுக்கு வீழ்த்த கடும் சிக்கலில் இலங்கை தத்தளித்தது.
திசர பெரேரா ரன் அவுட் ஆக, இசுரு உதனா தவ்லத் சத்ரான் பந்தில் 10 ரன்களுக்கு பவுல்டு ஆனார் ரஷீத் கான் அருமையாக வீசி விக்கெட் கிடைக்காத நிலயில் இலங்கை அணியின் டாப் ஸ்கோரர் குசல் பெரேராவை 78 ரன்களில் விக்கெட் கீப்பர் கேட்சுக்கு பெவிலியன் அனுப்பினார்.
மழை குறுக்கிட்டது. அப்போது இலங்கை 182/8 என்று தடுமாறியது. முகமது நபி 9 ஓவர்களில் 30/4 என்று பிரமாதப்படுத்தினார்.
மழை முடிந்து திரும்பிய பிறகு 201 ரன்களுக்கு 36.5 ஒவர்களில் இலங்கை அணி மடிந்தது. எக்ஸ்ட்ராஸ் வகையில் 35 ரன்கள். இதில் ஆப்கான் பவுலர்கள் 22 வைடுகளை வீசி சொதப்பினர். ரஷீத் கான் 7.5 ஓவர் 18 ரன்களுக்கு 2 விக்கெட், தவ்லத் ஸத்ரான் 2 விக்கெட்டுகளையும் ஹமித் ஹசன் 1 விக்கெட்டையும் வீழ்த்த நபி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து ஆடிவரும் ஆப்கான் அணி நன்றாகத் தொடங்கியது ஆனால் இலங்கை பதிலடியில் 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களை எடுத்துள்ளது, வெற்றிபெற 141 ரன்கள் தேவை 7 விக்கெட்டுகள் கையில் உள்ளன.