இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தை, லண்டன் ஓவல் மைதானத்தில் விஜய் மல்லையா கண்டுகளித்தார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
கடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அதே அணிதான் இந்த ஆட்டத்திலும் களமிறங்கியதால், மாற்றம் ஏதும் இல்லை. ஆஸ்திரேலிய அணியிலும் மாற்றம் ஏதும் இல்லை. தவண், ரோஹித் சர்மா இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டியை காண விஜய் மல்லையா ஓவல் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். வழக்கமாக கிரிக்கெட் போட்டிகளை காண அதிகமாக ஆர்வம் காட்டுபவர் விஜய் மல்லையா.
இந்தியாவில் இருந்தபோது நேரடியாக கிரிக்கெட் போட்டி நடைபெறும் அரங்கிற்கு சென்று உற்சாகமாக கண்களிப்பார். நண்பர்கள் புடைசூழ செல்லும் அவர் போட்டிகளை ரசித்து காண்பார்.
இந்தநிலையில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள மல்லையா லண்டன் தப்பிச் சென்றார். அங்கு வசித்து வரும் அவரை இந்தியா அழைத்து வர சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனிடையே லண்டனில் இந்திய அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுவதால் மைதானத்துக்கு வந்த அவர் வழக்கம்போல் உற்சாகமாக கண்டுகளித்தார்.
இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி என்பதால் ஓவல் மைதானம் வந்ததாக விஜய் மல்லையா தெரிவித்தார்.