உலகக்கோப்பை போட்டியில் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக நடந்துவரும் உலகக் கோப்பை லீக்ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார்.
விராட் கோலி ஒருநாள் போட்டியில் 37 ரன்களை எட்டியபோது, குறைந்த இன்னிங்ஸில் சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் புதிய சாதனையை படைத்தார்.
மான்செஸ்டர் நகரில் ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்துவருகிறது. இந்திய அணி தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா (18) விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்குவந்த கோலி, ராகுலுடன் சேர்ந்தார்.
இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். ராகுல் 48 ரன்க்ளில் ஹோல்டர் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் விராட் கோலி 37 ரன்கள் சேர்த்த போது, புதிய சாதனையை எட்டினார்.
இந்த போட்டி தொடங்கும் போது விராட் கோலி ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவி்ல 19 ஆயிரத்து 963 ரன்களுடன் இருந்தார். இந்தப் போட்டியில் 37 ரன்கள் எடுத்த போது, மிகக்குறைந்த போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையையும், சாதனையும் புதியவரலாற்றையும் கோலி படைத்தார்.
இதற்கு முன் சச்சின், லாரா, பாண்டிங் ஆகியோர் இந்த சாதனையைச் செய்துள்ளனர். அதாவது, சச்சின், லாரா இருவரும் தங்களின் சர்வதேசப் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை 453 இன்னிங்ஸ்களில் அடைந்தனர். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 468 இன்னிங்ஸ்களில் அடைந்திருந்தார்.
தற்போது கோலி 417 இன்னிங்ஸ்களில் (131 டெஸ்ட், 224 ஒருநாள் போட்டி, 62 டி20) விளையாடி 20 ஆயிரம் ரன்களைச் சேர்த்தள்ளார். இதில் கோலி சேர்த்துள்ள 20,000ரன்களில், 12 ஆயிரத்து 121 ரன்கள் ஒருநாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியில் 6 ஆயிரத்து 613 ரன்களும், டி20 போட்டியில் 2,263 ரன்களும் சேர்த்துள்ளார்.