விளையாட்டு

ரோஹித் இல்லாததால் தோல்வி: ஜான்ரைட்

செய்திப்பிரிவு

சாம்பியன்ஸ் லீக் போட்டியின் தகுதிச்சுற்றில் மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததே தோல்விக்கு காரணம் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜான்ரைட் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியின் தகுதிச்சுற்றில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த லாகூர் லயன்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. இதில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய லாகூர் லயன்ஸ் 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

இந்தப் போட்டிக்கு பிறகு பேசிய ஜான்ரைட், “கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாடாததால் சரியான தொடக்கம் அமையவில்லை. அதனால் தோற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இனிவரும் போட்டிகளில் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்துவதும், அதிவேகமாக ரன் குவிப்பதும் அவசியம்.

எந்தெந்த துறைகளில் பிரச்சினை உள்ளதோ அவையனைத்தையும் சரி செய்ய வேண்டும். பெரிய அளவில் ரன் குவிப்பது மிக முக்கியமானது. அதேநேரத்தில் லாகூர் அணி சிறப்பாக பந்துவீசியது. எங்கள் அணி 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும்” என்றார்.

பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் குறித்துப் பேசிய ரைட், “டி20 போட்டியைப் பொறுத்தவரையில் அக்மல் மிகவும் அபாயகரமான வீரர். அவரை ஆரம்பத்திலேயே வீழ்த்திவிட வேண்டும். ஒரு போட்டியில் தோற்றதற்காக பெரிய அளவில் வீரர்களை மாற்ற முடியாது. அதேநேரத்தில் அதற்கான வாய்ப்பு எங்களுக்கு இருக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT