அபுதாபியில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும், டெல்லி டேர்டெவில்ஸும் மோதுகின்றன.
முதல் ஆட்டத்தில் 205 ரன்கள் குவித்தபோதும் பஞ்சாபிடம் தோல்வி கண்ட தோனி தலைமையிலான சூப்பர் கிங்ஸ், வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் டெல்லியை சந்திக்கிறது. சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கிற்கு பிரென்டன் மெக்கல்லம், டுவைன் ஸ்மித் ஆகியோர் மிகப்பெரிய பலமாகத் திகழ்கின்றனர்.
மிடில் ஆர்டரில் ரெய்னா, கேப்டன் தோனி, டுவைன் பிராவோ ஆகியோர் வலு சேர்க்கின்றனர். ஆனால் பந்துவீச்சு பெரிய அளவில் எடுபடவில்லை. அதனால் பஞ்சாபுக்கு எதிராக வலுவான ஸ்கோரை குவித்தபிறகும், தோல்வியடைய நேரிட்டது. எனவே இந்த ஆட்டத்தில் நெஹ்ராவுக்குப் பதிலாக ஈஸ்வர் பாண்டேவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
பவன் நெஹிக்குப் பதிலாக மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரி அல்லது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹில்பெனாஸ் ஆகியோரில் ஒருவர் களமிறக்கப்படலாம்.
அப்படி களமிறக்கினால் ஆடும் லெவனில் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயரும். 4 வெளிநாட்டினர் மட்டுமே ஆடும் லெவனில் இடம்பெற முடியும் என்பதால் டூ பிளெஸ்ஸி நீக்கப்படுவார்.
டெல்லி அணி முதல் ஆட்டத்தில் பெங்களூரிடம் தோல்வி கண்ட நிலையில், கொல்கத்தாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் 167 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டிப்பிடித்ததால் புதிய உத்வேகம் பெற்றுள்ளது. அந்த அணி தினேஷ் கார்த்திக், டுமினி, டெய்லர், முரளி விஜய், மயங்க் அகர்வால் என வலுவான பேட்ஸ்மேன்களைக் கொண்டிருந்தாலும், பந்துவீச்சு கவலையளிப்பதாகவே உள்ளது.