விளையாட்டு

மைக்கேல் கிளார்க்கை என்னால் ஒரு போதும் மன்னிக்க முடியாது: டேல் ஸ்டெய்ன் காட்டம்

செய்திப்பிரிவு

கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் போது தன்னை நோக்கி ஆஸ்திரேலிய கேப்டன் வசைச்சொல்லை ஏவியதை மறக்கப்போவதில்லை என்றும் இதற்காக மைக்கேல் கிளார்க்கை ஒரு போதும் தான் மன்னிக்க மாட்டேன் என்றும் தென் ஆப்பிரிக்க வேகப்புயல் டேல் ஸ்டெய்ன் காட்டமாகக் கூறியுள்ளார்.

கிரிக்கெட் ஆட்டக்களத்தில் தன்னை மிகவும் காயப்படுத்திய வசைச்சொல் ஒன்று உண்டென்றால் அது அன்று மைக்கேல் கிளார்க் கூறியதே என்று ஸ்டெய்ன் இப்போது கூறியுள்ளார்.

ஆட்டத்தை தோல்வியிலிருந்து காப்பாற்ற டேல் ஸ்டெய்ன் பேட்டிங்கில் போராடிக் கொண்டிருந்த போது, ஜேம்ஸ் பேட்டின்சன் என்ற வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்னை நோக்கி ஓரிரு வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ள, இடையில் புகுந்த கிளார்க், டேல் ஸ்டெய்னை 'ஆழமாகப் பாதித்த' வசைச் சொல்லைக் கூறியுள்ளார்.

ஆனால் கிளார்க் என்ன கூறினார் என்று இன்று வரைத் தெரியவில்லை. ஆஸ்திரேலிய கேப்டன் இதற்காக உடனடியாக மன்னிப்புக் கேட்டாலும் அவரது மன்னிப்பில் உண்மை இருப்பதாகத் தான் கருதவில்லை என்று டேல் ஸ்டெய்ன் இப்போது கூறியுள்ளார்.

இது குறித்து ஆஸ்திரேலிய இணையதளத்தில் ஸ்டெய்ன் கூறியதாவது:

"நான் பல விஷயங்களை பெர்சனலாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அன்று கிளார்க் கூறியதை மிகவும் பெர்சனலாகவே எடுத்துக் கொண்டேன், இப்போதும் அப்படித்தான் கருதுகிறேன்.

அவர் ஊடகத்தில் தனது நடத்தைக்காக மன்னிப்பு கேட்டார் என்று எனக்குத்தெரியும், ஆனால் அதன் நேர்மை மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது.

ஆனால் ஒருநாள் அவர் என் கையைக் குலுக்கி தனது மன்னிப்பு உண்மையானதே என்று கூறி அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டால் நான் அவரை மன்னிப்பது பற்றி யோசிப்பேன்.

இப்போதைக்கு அவர் இங்கு இல்லை, ஆகவே நான் ஆஸ்திரேலியா செல்லும் வரைக் காத்திருப்பேன்” என்று கூறினார் டேல் ஸ்டெய்ன்.

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டிகளின் போது, சுமார் 9 தினங்களுக்கு முன்பு மைக்கேல் கிளார்க் இந்தச் சம்பவம் பற்றி கூறும்போது, நான் அப்போது கேட்ட மன்னிப்பு நல்ல முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே நினைத்தேன், டேல் ஸ்டெய்ன் மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது.

இந்நிலையில் அந்த அணியினர் எங்கள் வீரர்களிடத்தில் பேச விரும்பவில்லை என்றாலும் அதனால் யாரும் கவலைப்படப் போவதுமில்லை, என்று கூறியிருந்தார் மைக்கேல் கிளார்க்.

SCROLL FOR NEXT