விளையாட்டு

டிரிடென்ட்ஸை வீழ்த்தியது ஹரிக்கேன்ஸ்

செய்திப்பிரிவு

சாம்பியன்ஸ் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியில் பர்படோஸ் டிரிடெ ன்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி வீழ்த்தியது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி சண்டீகர் மொஹாலியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஹரிக்கேன்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. டிரிடென்ட்ஸ் அணி தொடக்கத்திலேயே சரிவைச் சந்தித்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கார்ட்டர் அதிரடியாக ஆடத் தொடங்கினார். அவர் 34 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். இதுதான் அந்த அணியில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும்.

ஹரிக்கேன்ஸ் தரப்பில் டோஹர்ட்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹில்பெனாஸ், போலிங்கர் தலா 2 விக்கெட் டுகளை வீழ்த்தினர். டிரிடென்ட்ஸ் அணி 19.4 ஓவர் களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் குவித்தது. எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹரிக்கேன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டங்க் ரன் கணக்கைத் தொடங்கு முன்னர் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் பெய்ன் 20 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார்.

அதிரடி காட்டிய ஷோயப் மாலிக் ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 39 ரன்களும், வெல்ஸ் ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 23 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர். ஹரிக்கேன்ஸ் அணி 18.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. டிரிடென்ட்ஸ் தரப்பில், ஹுசைன் 2 விக்கெட்டுகளும், மேயர்ஸ், முனவீரா தலா ஒரு விக்கெட்டுகளும் எடுத்தனர்.

SCROLL FOR NEXT