நீதிபதி ஹந்த்யாலா லஷ்மி நாராயணசுவாமி தத்து நாட்டின் 42வது தலைமை நீதிபதியாகப் இன்று பதவியேற்றார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நீதிபதி தத்துவிற்கு வயது 63 என்பது குறிப்பிடத்தக்கது. துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே.குரியன், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், எம்.வெங்கையா நாயுடு, ஆனந்த் குமார், பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் இந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து அபிஷேக் மனு சிங்வி, மற்றும் ராஜீவ் சுக்லா ஆகியோர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கடந்த சனிக்கிழமை ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
2ஜி ஊழல் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வின் தலைவராக இருக்கும் தத்து, 14 மாதகாலம் தலைமை நீதிபதியாக நீடிப்பார். டிசம்பர் 2, 2015-ல் இவர் ஓய்வு பெறுவார்.
“என்னுடைய இந்தப் பொறுப்பை தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும், உயர்வு நிலைக்குக் கொண்டு செல்ல நாட்டின் குடிமக்கள் அனைவரும் தங்கள் ஆசிகளை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று கடந்த மாதம் இவரது நியமனம் குறித்த கோப்பு பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற போது கூறினார்.
தத்து, 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இணைந்தார். இவர் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பிறந்தார். 1975ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்ட தத்து பெங்களூரில் வழக்கறிஞராக பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளார்.
பிறகு படிப்படியாக வளர்ந்து கர்நாடகா மாநில உயர் நீதிமன்ற நீதிபதியானார். பிறகு 2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சத்திஸ்கர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். பிறகு தலைமை நீதிபதியாக கேரளா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்