விளையாட்டு

ஸ்டட்கார்ட் ஓபன் அரையிறுதியில் ஷரபோவா

செய்திப்பிரிவு

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஸ்டட்கார்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் நடப்பு சாம்பியன் மரியா ஷரபோவா. காலிறுதி ஆட்டத்தில் போலந்தின் அக்னிஸ்கா ரத்வென்ஸ்காவை 6-4,6-3 என்ற நேர் செட் கணக்கில் ஷரபோவா வென்றார்.

தொடர்ந்து இருமுறை ஸ்டட்கார்ட் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஷரபோவா இம்முறை ஹாட்ரிக் சாதனை படைக்கும் முயற்சியுடன் களமிறங்கியுள்ளார். அக்னிஸ்காவுக்கு எதிராக இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள ஷரபோவா 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி குறித்து அவர் கூறியது: தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டில் 4 மாதங்கள் விளையாடாமல் இருந்தேன். அதன் பிறகு பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போனது. இந்நிலையில் இப்போது பெற்றுள்ள வெற்றியை பெரிய வெற்றியாகவே கருதுகிறேன் என்றார்.

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஷரபோவா இப்போது 9-வது இடத்தில் உள்ளார். தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அக்னிஸ்காவை வீழ்த்தியுள்ளதையே அவர் பெரிய வெற்றி என்று கூறியுள்ளார்.

அரையிறுதியில் இத்தாலி வீராங்கனை சாரா எர்ரானியை ஷரபோவா எதிர்கொள்கிறார். அரையிறுதி ஆட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த ஷரபோவா, சாரா எர்ரானிக்கு எதிரான ஆட்டம் மிகவும் சவால்மிக்கதாகவே இருக்கும். ஏனெனில் அவர் களிமண் தரையில் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்றார்.

மற்றொரு அரையிறுதியில் செர்பியாவின் அனா இவானோவிச், சக நாட்டு வீராங்கனையான ஜெலினா ஜான்கோவிச்சுடன் மோதுகிறார்.

SCROLL FOR NEXT