விளையாட்டு

பந்துவீச்சில் பலவீனமான சென்னை அணி லாகூர் லயன்ஸை வீழ்த்துமா?

செய்திப்பிரிவு

பேட்டிங்கில் பலம் வாய்ந்த தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வியாழக்கிழமை லாகூர் லயன்ஸ் அணியை சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டியில் பெங்களூரு மைதானத்தில் சந்திக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக எதிர்பாராத நிலையிலிருந்து பந்து வீச்சு பலவீனத்தால் தோல்வியடைந்த சென்னை, அன்று டால்பின்ஸ் அணியை தனது பேட்டிங் பலத்தினால் 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

லாகூர் லயன்ஸ் அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வி தழுவியது. பெங்களூரு பிட்ச் ரன்கள் குவிப்பு பிட்ச் ஆகும். இதில் லயன்ஸ் அணியின் பேட்டிங் சென்னை அணிக்கு சரிசமமாக இருக்குமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் சென்னை அணி பெங்களூருவில் ஒரு போட்டியில் ஆடியுள்ளது. லாகூர் லயன்ஸ் அணிக்கு இந்தப் பிட்ச் புதிதாக இருக்கும். குறிப்பாக பெல்ட்டர் பிட்சில் லாகூர் லயன்சின் சர்வதேசத் தர பந்து வீச்சே கூட அடித்து நொறுக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

இதற்கிடையே பெங்களூருவில் இன்று காலை கனமழை பெய்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் போட்டி மழையின் குறுக்கீடு இல்லாமல் நடைபெற்றால் மற்றொரு இந்தியா-பாகிஸ்தான் போட்டி போல் த்ரில்லிற்கு பஞ்சமிருக்காது என்று கூறலாம்.

ஏ-பிரிவில் கொல்கத்தா அணி 8 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க சென்னை 4 புள்ளிகளுடனும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 4 புள்ளிகளுடனும் முறையே 2 மற்றும் 3ஆம் இடத்தில் உள்ளது.

லாகூர் லயன்ஸ் நிறைய ரன்களைக் குவிப்பதோடு சென்னையை மலிவாக வீழ்த்தினால் மட்டுமே அதன் நிகர ரன் விகிதம் மற்ற அணிகளுக்கு சவால் அளிப்பதாக அமையும். நாளை இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறும்.

SCROLL FOR NEXT