கடந்த சில தொடர்களாக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் உலக பேட்ஸ்மென்களை அச்சுறுத்தி வரும் நிலையில் ஆப்கான் கேப்டன் அவர் பந்துவீச்சு குறித்து பயம் இல்லை என்று கூறியுள்ளார்.
தலிபான் மற்றும் அமெரிக்கப் படைகளின் குண்டு மழைகளைப் பார்த்ததால் அதைவிட மிட்செல் ஜான்சனின் பவுன்சர் தங்களை என்ன செய்து விடும் என்று நினைக்கிறாரோ ஆப்கான் கேப்டன் மொகமது நபி?
ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் தற்போது பெர்த் நகரில் உள்ளனர். ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் சில கிரிக்கெட் போட்டிகளை இந்த அணி விளையாடவுள்ளது.
2015 உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா இருக்கும் பிரிவில் ஆப்கான் அணி உள்ளது.
"நாங்கள் ஏற்கெனவே மிட்செல் ஜான்சன் பந்து வீச்சை எதிர்கொண்டுள்ளோம். யாரும் அவரது பந்து வீச்சு கண்டு அப்போது அஞ்சவில்லை. இனிமேலும் அச்சப்படப் போவதில்லை” என்று அவர் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸிற்கு தெரிவித்துள்ளார்.
ஆனாலும் ஆஸ்திரேலியா என்றால் சும்மாவா, அது ஒரு மிகப்பெரிய சவால், இன்னும் 5 மாதங்கள் உலகக் கோப்பைக்கு இருக்கிறது அதற்குள் இந்தப் பிட்ச்களில் நல்ல முறையில் தயார் செய்து கொள்வோம் என்றார் அவர்.
கேப்டன் மொகமது நபி ஆப்கான் ரசிகர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர். பாகிஸ்தானில் உள்ள அகதிமுகாமில் பிறந்து பெஷாவரின் தூசி நிரம்பிய தெருக்களில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆடி இன்று ஆப்கான் கேப்டனாக உயர்ந்திருக்கிறார்.
"ஆப்கானில் கிரிக்கெட் ஆட்டம் மீதான மோகம் அதிகம். நிறைய இளம் வீரர்கள் தங்கள் இடத்திலிருந்து வெளிவருகின்றனர். அவர்களுக்கு கர்வம் இருக்கிறது, ஆப்கான் நாட்டினர் கொண்டுள்ள அதே போராடும் குணம் இவர்களிடத்தில் உள்ளது, பல ஆண்டுகளாக போர்ச் சூழலில் வாழ்ந்து வந்துள்ளோம், ஆனால் யாரும் இதுவரை ஆப்கானை முற்றிலும் வீழ்த்தி விட முடியவில்லை.
ஆகவே இயல்பான ஆக்ரோஷத் தன்மையை ஊக்குவித்து மேலே கொண்டு வரப்போகிறேன், ஒழுக்கத்துடன் கூடிய இயல்பான திறமையினால் சில சவால்களை ஏற்படுத்துவோம்” என்கிறார் மொகமது நபி.