விளையாட்டு

தற்கொலை எண்ணங்களிலிருந்து மீண்டு அபாரமாக ஆடிய அயர்லாந்து ஆல்ரவுண்டர் ஜான் மூனி

செய்திப்பிரிவு

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஜான் மூனி தனது தற்கொலை எண்ணங்களிலிருந்து மீண்டு வந்து 12ஆம் தேதி ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக தனது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரை அடித்தார்.

இடது கை பேட்ஸ்மெனும் வலது கை மித வேகப்பந்து வீச்சாளருமான ஜான் மூனிக்கு வயது இப்போது 32 ஆகிறது.

அவர் 2 ஆண்டுகளாக தனது மன உளைச்சல் அவரை எப்படி உருக்குலைத்தது என்பதை அயர்லாந்தின் ஆர்.டி.இ.ஸ்போர்ட் என்ற சானலில் விவரித்தார்.

”கடந்த சில ஆண்டுகளாகவே தினசரி வாழ்க்கையிலிருந்து என்னை நான் துண்டித்துக் கொண்டேன். கடுமையாக மதுபானம் எடுத்துக் கொண்டேன், நான் பொதுவாக எனது உணர்ச்சிகளை அடுத்தவர்களிடத்தில் பகிர்ந்து கொண்டதில்லை. 20 ஆண்டுகளாக எனது எண்ணங்களை நான் எனக்குள்ளேயே போட்டுப் புதைத்து விட்டேன். இதே மன நிலையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் பயணத்திற்குச் சென்றேன், ஒரு நேரத்தில் என்னால் அந்தத்தொடரில் நீடிக்க முடியாமல் போனது.

தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவெடுத்து என் மனைவியிடம் அது பற்றி கூறினேன், அவளோ இதைக் கேட்டு உடைந்து போனாள். ஆனால் அதன் பிறகுதான் செயிண்ட் பேட்ஸ் மனநல காப்பகத்தை அணுகினேன். இது நான் வாழ்க்கையில் செய்த சிறந்த காரியம் என்று எனக்கு இப்போது புரிகிறது. இல்லையெனில் தற்கொலைதான் ஒரே தீர்வு என்ற நிலையில்தான் நான் இருந்தேன்.

அதாவது தற்கொலை மீது ஒரு ஆசையே வந்து விட்டது. ஏன் அந்தச் சிந்தனை மண்டைக்குள் போய் உட்கார்ந்தது என்று என்னால் கூற முடியவில்லை. சில விஷயங்கள் விசித்திரமானவைதான்.

எனக்கு 11 வயதாக இருக்கும்போது எனது தந்தை என் கண் முன்னால் உயிரிழந்ததை என்னால் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை அந்த மரணம் என்னைப்புரட்டிப் போட்டது. அவரிடம் நான் அயர்லாந்துக்காக ஆடுவேன் என்றேன் அதுதான் என்னை செலுத்தியது, ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆசையும் தளர்ந்து போக எதிலும் பிடிமானம் இல்லாமல் போனது.

நான் இதனை முன்னமேயே தெரிவித்து இருக்கலாம். ஆனால் என்னை பலவீனமானவன் என்று கூறி அணியில் எடுக்காமல் விட்டு விடுவார்களோ என்று அஞ்சினேன். ஆனால் இப்போது முழுதும் குணமடைந்து விட்டேன் என்று கூற முடியாவிட்டாலும், தொடர்ந்து நான் என்னைக் கண்காணித்துக் கொள்வேன்.

மன உளைச்சல் இருப்பவர்கள் உடனே அதனை கூச்சப்படாமல் நம்பகமானவர்களிடையே தெரிவிக்க வேண்டும்” என்றார் ஜான் மூனி.

இந்த பேட்டியைக் கொடுத்த மறுநாள்தான், அதாவது நேற்றைக்கு முந்தைய நாள் அவர் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 77 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கும்.

ஜான் மூனி அயர்லாந்து அணிக்காக 50 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். பொதுவாக பின்வரிசையில் இறங்குவார். 36 ஒரு நாள் போட்டி விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

2006ஆம் ஆண்டு ஜான் மூனி இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடினார். 8ஆம் நிலையில் களமிறங்கி கடைசியில் 26 பந்துகளில் 30 ரன்களை எடுத்தார். இவரது அதிகபட்ச எண்ணிக்கை தற்போது 96 ரன்கள்.

இது வெறும் ரன்கள் அல்ல தனது வாழ்க்கையை மறு கண்டுபிடிப்பு செய்து கொண்ட கணம் என்கிறார் ஜான் மூனி.

SCROLL FOR NEXT