ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனான ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக சமீபமாக குறைந்த ஓவர் கிரிக்கெட்களில் ஆடாததால் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
ஆனால் ஹேசில்வுட் இருமுறை தான் உலகக்கோப்பையிலிருந்து நீக்கப்பட்டதாக புலம்பித் தள்ளினார், இன்னொரு முறையும் உலகக்கோப்பை போட்டிகளைத் தொலைக்காட்சியில்தான் பார்க வேண்டுமா என்றெல்லாம் கேட்டு அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறும்போது, “காயமடைந்ததால் அவர் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் ஆடவில்லை. முதுகில் 2வது ஸ்ட்ரெஸ் எலும்பு முறிவு ஏற்பட்டது. இப்போதுதான் எழுந்து, ஓடத் தொடங்கியுள்ளார்.
கடந்த 18 மாதங்களில் வெள்ளைப்பந்து போட்டிகளில் ஆறில் மட்டும்தான் ஆடியுள்ளார். இதில் டி20-யும் அடங்கும்.
அவர் பெரிய பவுலர், பிரமாதமாக வீசுவார் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை, ஆனால் காயத்தின் காலம் அவருக்கு எதிரான காலமாகிவிட்டது. ஹேசில்வுட்டின் புள்ளிவிவரங்கள் ஆரோக்கியமாகவே உள்ளன, அணிக்குத் தேவைப்படும் வீரர்தான் அவர், ஆனால் கடைசியாக அவர் கிரிக்கெட் எதிலும் ஆடாத போது எப்படி அணியில் தேர்வு செய்ய முடியும்?
அவர் ஏமாற்றமடைந்திருப்பார் என்று தெரியும், சில வீரர்கள் ஏமாற்றமடைந்துள்ளதையும் நான் அறிவேன், ஆனால் எனக்கு வேறு வழியில்லை.
ஆஸி.ஏ தொடர் மூலம் அவர் மீண்டும் கிரிக்கெட் ஆடப்போகிறார். அவர் அதில் ஆடித் திரும்பினால் அவரது வருகைக்காக நாங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்காது” என்றார் ஜஸ்டின் லாங்கர்.