வேகப்பந்துவீச்சாளர்கள் லுங்கி இங்கிடி, ரபாடாவின் பவுன்ஸர்கள், அன்டில் பெலுக்வேயோவின் சிறப்பான பந்துவீச்சு ஆகியவற்றால், கார்டிபில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி.
சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் சென்று அவர்களை வீழ்த்த இலங்கை அணி மார்தட்டியது. அதற்கு நேற்று தென் ஆப்பிரிக்க அணி மிகச்சரியாக பழிதீர்த்துக்கொண்டது.
அதிலும் குறிப்பாக லுங்கி இங்கிடி, ரபாடாவின் பந்துவீச்சு நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் மிக அற்புதம். இவரின் பந்துவீச்சை சமாளித்து பேட் செய்ய இலங்கை பேட்ஸ்மேன்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இங்கிலாந்து ஆடுகளங்கள் இந்த முறை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் மிதவேகப்பந்துவீச்சாளர்கள் பவுன்ஸர் இல்லாமல், அதாவது முதுகை வளைத்து பவுன்ஸ் வீசுமபோதுதான் வேகத்தை அதிகப்படுத்த முடியும், பேட்ஸ்மேன்களை திணறவிடமுடியும் இல்லாவிட்டால், பந்துவீச்சாளர்களை நொறுக்கிவிடுவார்கள் பேட்ஸ்மேன்கள். இந்த நுட்பத்தை புரிந்துகொண்ட இங்கிடி, ரபாடா நேற்று சிறப்பாக வீசினார்கள்.
இந்திய அணியில் இந்த நுட்பத்தின்படி பும்ரா, ஷமி மட்டுமே வீசக்கூடியவர்கள், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியாவுக்கு இதுபோன்று பந்துவீசுவார்களா எனத் தெரியவில்லை.
6 ஓவர்கள் வீசிய லுங்கி இங்கிடி 2 மெய்டன் 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரபாடா 7 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட்டை கைப்பற்றினார். பெலுக்வேயோ 7 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்தது. 339 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 42.3 ஓவர்களில் 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை பயிற்சி ஆட்டத்தில் 9 பேட்ஸ்மேன்கள் பேட் செய்ததில் மில்லர்(5) ஒருவரைத் தவிர மற்ற 8 பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்கத்தில் ரன்களைச் சேர்த்துதான் ஆட்டமிழந்தனர்.
தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லா ஏற்கனவே ஒருபேட்டயில் கூறியதைப் போல், நான் ரன் பசியுடன் இருக்கிறேன், உலகக் கோப்பையில் என் ரன் பசியைத் தீர்ப்பேன் என்று கூறியதை நிரூபிக்கும் விதத்தில்தான் பேட் செய்தார்.
தொடக்கத்திலேயே மார்க்ரம் 21 ரன்கள் சேர்த்த நிலையில் 7-வது ஓவரில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு கேப்டன் டூப்பிளசஸிடன் சேர்ந்து, அம்லா பொறுப்பாக பேட் செய்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர்.
அம்லா 65 ரன்களிலும், டூப்பிளசிஸ் 88 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்கள் இருவரும் சென்றபின்பும் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் மனம்தளராமல் பேட் செய்தனர். அடுத்த வந்த வேன் டர் டுசன் (40), பெலுக்வேயோ (35), மோரிஸ்(26) என குறைந்தபந்துகளி்ல் அதிரடியாக பேட் செய்து வெளியேறினார்கள்.
இந்த ஆட்டத்தில் இலங்கை அணியில் வேகப்பந்துவீச்சாளர் மலிங்காவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்ததால், பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக இல்லை.
பிரிட்டோரியஸ் 25, மோரிஸ் 26 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்களை எளிதாகக் குவித்தது.
7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதில் உதானா மட்டுமே ஓரளவுக்கு கட்டுக்கோப்புடன் பந்துவீசினார். 10 ஓவர்கள் வீசி 42 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒருவிக்கெட்டை விழத்தினார். மற்றவர்கள் அனைவரும் ஓவருக்கு சராசரியாக 8 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தனர்.
339 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. முதல் இரு ஓவர்களிலேயே ரபாடாவும், இங்கிடியும் தங்களின் பந்துவீச்சின் துல்லியத்தைவெளிப்படுத்தி இலங்கை பேட்ஸ்மேன்களை திணறவிட்டனர்.
இங்கிடி வீசிய முதல் ஓவரில் பெரேராவும்(0), அடுத்த ஓவரில் திரிமானே(10)வும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த மென்டிஸ், கருணாரத்னேவுடன் இணைந்து ஓரளவுக்கு நிதானமாக பேட் செய்தார். ஆனாலும், ரபாடா, இங்கிடி பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டனர்.
37 ரன்களில் மென்டிஸ் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு கருணாரத்னேயுடன் மாத்யுஸ் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் 100 ரன்கள் கூட்டணி சேர்த்துப் பிரிந்தனர். கருணா ரத்னே 88 ரன்களிலும், மாத்யூஸ் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபின் இலங்கையின் சரிவு தொடங்கியது. பின்வரிசை பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 42.3 ஓவர்களில் இலங்கை அணி 251 ரன்களுக்க ஆட்டமிழந்தது