இங்கிலாந்து தொடரின் போது காயமடைந்த இந்திய ஒருநாள் தொடக்க வீரர் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது விரலில் காயமடைந்த ரோகித் சர்மா தற்போது கூடுதலாக தோள்பட்டைக் காயம் அடைந்துள்ளார். இதனால் அவர் 20 ஓவர் போட்டித் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறைந்தது 4 வாரங்களுக்கு அவரால் விளையாட முடியாது என்று தெரிகிறது.
அக்டோபர் 8ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக கொச்சியில் தொடங்கும் முதல் ஒருநாள் போட்டிக்குள் அவர் தயாராகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அந்தத் தொடரிலும் அவர் முழுதும் பங்கேற்க முடியுமா என்பதும் சந்தேகமாகியுள்ளது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு புதிய கேப்டனைத் தேர்வு செய்தாக வேண்டியுள்ளது.
ஹர்பஜன் சிங், போலார்ட், மலிங்கா ஆகியோரில் ஒருவர் கேப்டன்சி வாய்ப்பு பெற வாய்ப்பிருக்கிறது. மலிங்காவுக்கு கேப்டன்சி கொடுக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது.
2011ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற போது ஹர்பஜன் சிங் கேப்டனாக இருந்தார். மலிங்கா மற்றும் போலார்ட் ஆகியோர் தங்கள் நாட்டு 20 ஓவர் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 13ஆம் தேதி லாகூர் லயன்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி தகுதிச் சுற்றில் மோதுகிறது.