ஆசிய விளையாட்டு வட்டு எறிதல் போட்டியில் நேற்று இந்தியாவின் சீமா பூனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு 3-வது தங்கம் கிடைத்துள்ளது.
சீமா தனது 4-வது முயற்சியில் 61.03 மீட்டர் தூரம் வட்டு எறிந்து சீன போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கனை கிருஷ்ணா பூனியாவுக்கு 4-வது இடம்தான் கிடைத்தது.
சீமா பூனியாவுக்கு இந்த ஆண்டு சிறப்பானதாக அமைந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். அப்போது அவர் 61.61 மீட்டர் தூரம் வட்டு வீசினார். அதற்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் அவர் வெண்கலம் வென்றார்.இப்போது தனது முதல் ஆசிய போட்டியிலேயே தங்கம் வென்று சாதித்துள்ளார். ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சீமா பூனியாவுக்கு வயது 31.
2004, 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றுள்ள அவர் அப்போது முறையே 14,13-வது இடத்தை பிடித்தார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் சீமா 61.91 மீட்டர் தூரம் வட்டு வீசினார். அவற்றுடன் ஒப்பிடும்போது இப்போது ஆசிய விளையாட்டில் அவர் குறைவான தூரமே வீசியுள்ளார்.
டென்னிஸில் தங்கம்
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா – சாகேத் சாய் மைனேனி ஜோடி தங்கம் வென்றது. இறுதி ஆட்டத்தில் சீன தைபேயின் ஹசீன் யின் –ஹோ சிங் ஜோடியை 6-4,6-3 என்ற நேர் செட்களில் சானியா ஜோடி அபாரமாக வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றியது.
ஆசிய விளையாட்டு போட்டியின் 10-வது நாளான நேற்று இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றது.
மல்யுத்த பதக்கங்கள்
மல்யுத்தப் போட்டியில் ஆடவர் 61 கிலோ பிரி ஸ்டைல் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய இந்தியாவின் பஜ்ரங் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது. இறுதி ஆட்டத்தில் ஈரானின் மசூத் இஸ்மாயிலிடம் அவர் தோல்வியடைந்தார்.
74 கிலோ பிரி ஸ்டைல் பிரிவில் இந்தியாவின் நரசிங் யாதவ் நேற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆடவர் இரட்டையர் டென்னிஸில் வெள்ளி
ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியா நேற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் தென் கொரியாவின் லிம் யோங்க்யூ, சங் ஹையான் ஜோடியை இந்தியாவின் சாகேத் சாய் மைனேனி - சனம் கிருஷண் சிங் ஜோடி எதிர்கொண்டது. இதில் 5-7, 6-7, என்ற நேர் செட் கணக்கில் இந்திய வீரர்கள் தோல்வியடைந்து, வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தனர். தென் கொரிய இரட்டையர்கள் ஜோடி தங்கம் வென்றது.
2010-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் சனம் கிருஷண சிங் -சோம்தேவ் தேவ் வர்மன் ஜோடி இரட்டையர் டென்னிஸ் பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தடகளத்தில் வெண்கலம்
1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் ஓ.பி.ஜெய்ஸா மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். அவர் 4 நிமிடம் 13.46 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். இப்பிரிவில் பக்ரைன் மகளிர் தங்கம், வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். மரியம் யூசுப் இஸா ஜமால் 4 நிமிடம் 9.90 விநாடிகளில் தூரத்தை கடந்து தங்கம் வென்றார். பெலிட்டி 4 நிமிடம் 11.03 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆடவர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்தியாவின் நவீன் குமார் நேற்று வெண்கலப் பதக்கம் வென்றார். நேற்று இந்தியாவுக்கு சிறப்பான நாளாக அமைந்தது 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் கிடைந்தன. மொத்தமாக 6 தங்கம், 7 வெள்ளி, 29 வெண்கலம் என 42 பதக்கங்களுடன் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.