விளையாட்டு

இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்குத் தடை : உலகக்கோப்பை கனவு தகர்கிறதா?

செய்திப்பிரிவு

வரவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அறிவித்த 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் இங்கிலாந்தின் அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் அவருக்கு 21 நாட்கள் தடை விதிக்கப்பட்டதையடுத்தும் அதன் விளைவுமாக அவரது உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வருவது போல் தெரிகிறது.

உலகக்கோப்பைக்கான தற்காலிக 15 வீரர்கள் அணியை இங்கிலாந்து அறிவிக்கும் போது ஹேல்ஸ் உற்சாக போதை மருந்து விவகாரம் இங்கிலாந்து தேர்வுக்குழுவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

உற்சாகப் போதை மருந்து எடுத்துக் கொண்டதாக அவர் மீது புகார் எழ அவரது தலைமுடி வேர்க்கால் சோதனை மாதிரிகளும் அதனை உறுதி செய்ய அலெக்ஸ் ஹேல்ஸ் விளையாட 21 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் சமீபமாக ராயல் லண்டன் கோப்பை போட்டிகளிலிருந்து சொந்தக் காரணங்களினால் விலகுவதாக அறிவித்திருந்தார், ஆனால் அதன் உண்மைக் காரணம் போதை மருந்து என்பது இப்போது தெரியவந்துள்ளதாக கார்டியன் இதழ் தெரிவித்துள்ளது.

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் கூறியபோது, “ரகசியத்தைக் காக்கும் கடமை எங்களுக்கு இருப்பதால் இப்போதைக்கு இது குறித்து எதுவும் கூறுவதற்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு சீசன் முடிவிலும் இங்கிலாந்து ஆடவர், மகளிர் வீரர்கள் சோதனை எடுத்துக் கொள்வது அவசியம் இந்நிலையில்  தலைமுடி வேர்க்கால் சோதனை நடத்தப்பட்ட போது இவர் உற்சாக போதை மருந்து எடுத்துக் கொண்டது தெரியவந்தது. 2013-ல் சர்ரே வீரர் டாம் மேனார்ட் மரணத்தை அடுத்து இந்தச் சோதனை  அவசியமாக்கப்பட்டது.

முதல் முறை இந்தத் தவறு சுகாதாரம் மற்றும் சேமநல விவகாரமாகப் பார்க்கப்படும். 2வது முறையும் இதே தடைசெய்யப்பட்ட போதை மருந்து எடுத்துக் கொண்டது தெரியவந்தால் 3 வாரங்கள் தடை மற்றும்  வீரரின் ஆண்டு வருவாஇல் 5% அபராதம் விதிக்கப்படும்.

3வது முறையும் தவறு செய்த டர்ஹாமின் ஜாக் பர்ன்ஹாம் 2017-ல் 12 மாதங்கள் தடை செய்யப்பட்டார். இந்நிலையில் அலெக்ஸ் ஹேல்ஸ் உலகக்கோப்பை வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

சமீபத்தில்தான் பென்ஸ்டோக்ஸும் இவரும் பிரிஸ்டல் மதுபான விடுதியில் ஒருவரை அடித்து உதைத்த சம்பவத்தில்  6 வெள்ளைப்பந்து போட்டிகளுக்குத் தடை செய்யப்பட்டதோடு 17,500 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டார். இதில் பென் ஸ்டோக்ஸ் சிறை சென்றதும் குறிப்பிடத்தக்கது.

மே 23ம் தேதி வரை இங்கிலாந்து தன் இறுதி உலகக்கோப்பை அணியை அறிவிக்காது என்றாலும் ஹேல்ஸ் தடை குறித்த முழு காலக்கணக்கும் தெரியாததால் உலகக்கோப்பையை அவர் இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இடையில் அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் தொடருக்கு அவர் விளையாட வாய்ப்புள்ளது.

இந்த போதை விவகாரம் அவரது உலகக்கோப்பை வாய்ப்புகளை தகர்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை அவர் தேர்வுக்கு தகுதியடைந்தாலும் தொடர்ந்து பிரச்சினைக்குரிய ஒரு வீர்ராக இருப்பதால் உலகக்கோப்பையில் அவரைத் தேர்வு செய்து இங்கிலாந்து ரிஸ்க் எடுக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

SCROLL FOR NEXT