1983 உலகக்கோப்பையை வென்ற லெஜண்ட் கபில் தேவ், இருமுறை உலகக்கோப்பையை வென்றவர் கிரிக்கெட்டின் ஜெண்டில்மேன் ஆட்டத்துக்கு நிறைய பங்களிப்புச் செய்தவர் மகேந்திர சிங் தோனி என்று விதந்தோதியுள்ளார்.
2018-ல் தோனியின் பார்ம் கடும் விமர்சனத்துக்குள்ளான போது கூட முன்னாள் வீரர்கள் பலர் தோனிக்கு ஆதரவாகவே பேசி வந்தனர். இந்நிலையில் கபில் தேவ் களத்தில் தோனி நிகழ்த்திய பங்களிப்புகளை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
“தோனி பற்றி நான் கூறுவதற்கு என்ன இருக்கிறது? அவர் நாட்டுக்காக சிறந்த சேவையாற்றியுள்ளார், அவரை நாம் மதிக்க வேண்டும்.
அவர் இன்னும் எவ்வளவு காலம் ஆடுவார், ஆட விரும்புவார் என்று யாருக்கும் தெரியாது, அவர் உடல் தகுதியைப் பொறுத்து அவர் முடிவு செய்ய வேண்டிய விஷயம் அது. ஆனால் தோனி அளவுக்கு நாட்டுக்காக சிறப்பாக செயல்பட்ட இன்னொரு கிரிக்கெட் வீரர் இல்லை என்றே கூறுவேன். அவரை மதிக்க வேண்டும், அவரது நல்லதிர்ஷ்டத்துக்காக நாம் அவரை வாழ்த்த வேண்டும். இந்த முறையும் உலகக்கோப்பையை அவர் வென்று கொடுப்பார் என்று நம்புகிறேன்.
இந்த இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது, ஆனால் உலகக்கோப்பையை வெல்வதெல்லாம் அவ்வளவு எளிதல்ல. ஒரு அணியாக ஆட வேண்டும். காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் அதிர்ஷ்டம் கைகொடுத்தால் நிச்சயம் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும்.
ரிஷப் பந்த்தா தினேஷ் கார்த்திக்கா என்று என்னைக் கேட்டால், தேர்வுக்குழுவினர் அவர்கள் வேலையைச் செய்துள்ளனர், நாம் இந்த அணியை மதிக்க வேண்டும். பந்த்திற்கு பதில் கார்த்திக்கை தேர்வு செய்தால் என்ன? தேர்வுக்குழுவினர் நல்ல முடிவை எடுத்திருப்பதாக நாம் நம்புவோம்.
இவ்வாறு கூறினார் கபில்தேவ்.