விளையாட்டு

ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார் டேல் ஸ்டெயின் - உலகக்கோப்பை பங்கேற்பு கேள்விக்குறி

பிடிஐ

ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஸ்டெயினுக்கு ஏற்பட்ட தோள்பட்டை காயம் பலமாக இருப்பதால், அவர் உலகக் கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெறுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நாதன் கோல்டர் நீல் காயம் காரணாக விலகியதைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவில் இருந்து டேல் ஸ்டெயின் அழைக்கப்பட்டார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடிய ஸ்டெயின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஆர்சிபி அணியின் தலைவர் சஞ்சீவ் சுரிவாலா கூறுகையில், " ஸ்டெயின் தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவரால் தொடர்ந்து பந்துவீச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை கருதி, அவரை அணியில் இருந்து விடுவிக்கிறோம்இந்த சீசனில் ஸ்டெயின் இனி விளையாடமாட்டார். ஆர்சிபி அணிக்காக ஸ்டெயின் பங்கேற்ற 2 போட்டிகளில் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம், அவர் அணியில் இருந்தது பெருமையாக இருந்தது.அவர் விரைவாக குணமடைய வாழ்த்துக்கள் " எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT