மன்கட் அவுட் விவகாரம் தொடர் பேச்சாக்கி வருகிறது, முதற்கட்ட ‘ஸ்பிரிட் ஆஃப் த கிரிக்கெட்’ / விதிப்படி சரி என்ற வாத விவாதங்கள் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி ட்ரா ஆன நிலையில், ஜோஸ் பட்லர் தனக்கு அவுட் கொடுத்தது தவறு என்றும் அஸ்வின் செய்தது தவறான முன்னுதாரணம் என்றும் அதுவும் ஒரு தொடரை இப்படியா தொடங்குவது என்றும் சாடியுள்ள நிலையில் அஸ்வினும் தன் பங்குக்கு விளக்கம் அளித்து வருகிறார்.
ஆனால் பட்லர் பிறந்தநாடான இங்கிலாந்தில் அஸ்வின் செய்தது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒரு ‘டாக் ஷோ’வில் அஸ்வின் புகைப்படத்தை வைத்து விமர்சனங்களை முன் வைத்தார். ஆனால் அஸ்வின் இந்த ‘ஸ்டண்ட்’ எல்லாம் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்.
அஸ்வின் கூறும்போது, “கீமோ பால் மன்கட் அவுட் செய்த போது யு-19 உலகக்கோப்பை முடியும் வரை பலிகடாவாக்கப்பட்டார். ஒரு பவுலர் எந்தப் பக்கத்திலிருந்து வீசுகிறார் என்பதை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும் கிரீசுக்கு வந்து வீசுவேனா, அல்லது கிரீசுக்கு பின்னாலிலிருந்து வீசப்போகிறேனா என்பதை தெரிவிக்க வேண்டும், கோடு என்பது நடுவருக்கானது, சில சமயங்களில் பேட்ஸ்மேனுக்கானது. ஆனால் வலது கை பேட்ஸ்மேன் எதுவும் சொல்லாமல் மட்டையை இடது கையில் மாற்றி ஸ்விட்ச் ஹிட் செய்யலாம். நடந்து வந்து பந்துகளை விளாசலாம்.
பவுலர்களின் மனநிலை என்று பேசினால் ஸ்பிரிட் ஆஃப் த கேம் எங்கே?
ஜேம்ஸ் ஆண்டர்சன் விமர்சனம் எல்லாம் என்னைத் தொந்தரவு செய்யாது. நான் ஏற்கெனவே கூறியது போல் என் மனசாட்சி சுத்தமாக உள்ளது. ஆகவே இதுகுறித்த நேர்மறை, எதிர்மறை விமர்சனங்கல் என்னைப் பாதிக்காதவாறு நான் என் மனதைத் திடப்படுத்திக் கொண்டுள்ளேன். ஏனெனில் அது அவர்கள் கருத்து. அது என் கேரக்டரையோ, ஆட்டத்தையோ பிரதிபலிப்பதாகாது.
இன்று ஜிம்மி ஆண்டர்சன் நான் செய்ததைத் தவறு என்று கூறலாம் ஆனால் நாளை அவரே இதைச் செய்வதில் போய் முடிவார்” என்றார்.