கடும் சவாலாக இருக்கும், சீட்டு நுனியில் பார்வையாளர்களை உட்கார வைக்கும் என்று எதிர்பார்த்த சிஎஸ்கே / கேகேஆர் ஐபிஎல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் எந்த ஒரு பொறிபறக்கும் சுவாரஸ்யமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியில் முடிந்தது.
சுனில் நரைன், கிறிஸ் லின், ராணா, உத்தப்பா ஆகிய முக்கிய விக்கெட்டுகளை பவர்ப்ளேயில் கொல்கத்தா அணி இழந்து மீள முடியவில்லை, ஆனால் ஆந்த்ரே ரஸலின் அரைசதத்தை தினேஷ் கார்த்திக், “முதிர்ச்சியான” இன்னிங்ஸ் என்று பாராட்டியுள்ளார்.
தோனி பிட்ச் பற்றி விமர்சனம் வைக்க தினேஷ் கார்த்திக் ஆட்ட முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் பிட்ச் பற்றி எதுவும் கூறாதது குறிப்பிடத்தக்கது.
தினேஷ் கார்த்திக் கூறியதாவது:
நிச்சயமாக ரன்கள் போதாது. இத்தகைய ஆட்டங்கள் கொஞ்சம் ‘ட்ரிக்கி’ ஆனதுதான். எது நல்ல ஸ்கோர் என்று தீர்மானிக்க முடியாத ஆட்டம். பனிப்பொழிவு உள்ளிட்டவை இருக்கின்றன.
எப்போதும் இன்னும் கொஞ்சம் கூடுதல் ரன்கள் தேவை என்ற எண்ணத்தைத் தடுக்க முடியாது. பவர் ப்ளேயில் 4 விக்கெட்டுகள் கண்டிப்பாக பின்னடைவுதான். ஆனால் ரஸல் முதிர்ச்சியுடன் ஆடியதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
மிகக்குறைந்த இலக்கைத் தடுக்கும் போது ஸ்பின்னர்கள் நன்றாக வீசினர். இதில் எனக்கு திருப்தி. பேட்ஸ்மென்களிடம் கவனம் இல்லை என்று கூறுவதற்கில்லை. 2 வாரங்கள் நாங்கள் ரோடில்தான் இருந்தோம். ஒரு இரவு மறக்கப்பட வேண்டிய இரவாகி விட்டது. மறப்போம், அடுத்த போட்டி புதிய போட்டி, புதிய தினம்.
இவ்வாறு கூறினார் தினேஷ் கார்த்திக்.