உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து அம்பதி ராயுடு தேர்வு செய்யாதது பல முரண்பட்ட, கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. கம்பீர் உள்ளிட்டோர் ராயுடுவுக்காக வருந்தியுள்ள நிலையில் இந்திய முன்னாள் இடது கை ஸ்பின்னர் பிராக்யன் ஓஜா, வேறொரு கோட்பாட்டை முன் வைத்துள்ளார்.
அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், விஜய் சங்கரைக் குறிப்பிடும் போது 3 பரிமாண வீரர், 3டி வீரர் என்று ஆல்ரவுண்ட் திறமையை விதந்தோதியிருந்தார்.
இதனை கிண்டல் செய்யும் விதமாக ராயுடு ‘உலகக்கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காக இப்போதுதான் 3டி கண்ணாடிகளுக்கு ஆர்டர் செய்தேன்” என்று கிண்டல் ட்வீட் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து நடவடிக்கை எதுவும் இல்லை என்று பிசிசிஐ-யும் கூறிவிட்ட நிலையில் பிராக்யன் ஓஜா தானும் இம்மாதிரி சூழ்நிலையை எதிர்கொண்டவன் தான் என்று கருத்து தெரிவித்ததோடு, ஹைதராபாத் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்று சதிக்கோட்பாடு ஒன்றை தன் ட்விட்டரில் தெரிவித்தார்.
அதாவது, “சில ஹைதராபாத் கிரிக்கெட் வீரர்களுக்கு இப்படி நடந்துள்ளது. நானும் இதே சூழ்நிலைக்கு ஆட்பட்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பிராக்யன் ஓஜா 2009 முதல் 2013 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 24 போட்டிகளில் ஆடி 113 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2008-12 காலக்கட்டத்தில் 18 ஒருநாள் போட்டிகளில் 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.