7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் விருந்து நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாரூக் கான், மாதுரி தீட்சித் ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெறும் என தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக பிரம்மாண்ட தொடக்க விழா நடை பெறும். ஆனால் இந்த முறை தொடக்க விழாவுக்குப் பதிலாக விருந்து நிகழ்ச்சியை நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அபுதாபியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாரூக் கானும், நடிகை மாதுரி தீட்சித்தும் தங்களுடைய ஹிட் பாடல்களுக்கு நடனமாடுவார்கள் என தெரிகிறது.
இது தொடர்பாக “கஃல்ப் நியூஸ்” வெளியிட்டுள்ள செய்தியில், “ஷாரூக்கான், மாதுரி தீட்சித் ஆகியோருடன் தீபிகா படுகோனும் நடனமாடலாம். இந்த நிகழ்ச்சிக்காக ஷாரூக் கான் பிரபல நடிகர், நடிகைகளுடன் பேசி வருகிறார். மாதுரி தீட்சித் தனது வருகையை உறுதி செய்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்ததைத் தொடர்ந்து 7-வது ஐபிஎல் போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டன. அதன்படி ஏப்ரல் 16 முதல் 30 வரையில் முதல் கட்ட போட்டிகள் அமீரகத்தில் நடைபெறுகின்றன.