விளையாட்டு

கையில் காயம்பட்டு வலியுடன் இப்படியொரு இன்னிங்ஸை ஆடியது...! : மயங்க் அகர்வால் குறித்து ராகுல் நெகிழ்ச்சி

இரா.முத்துக்குமார்

நேற்று மொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கிங்ஸ் லெவன் வீழ்த்தியதில் மயங்க் அகர்வால், ராகுல் கூட்டணி முக்கியப் பங்கு வகித்தது.

கெய்லை விரைவில் இழந்த கிங்ஸ் லெவன் அணியை மயங்க் அகர்வால், ராகுல் இணைந்து 114 ரன்கள் கூட்டணியுடன் வெற்றிக்கு அருகில் இட்டுச் சென்றனர், கடைசியில் கவுல், சந்தீப் சர்மா ஒவர்களில் 10 ரன்களுக்குல் 3 விக்கெட்டுகளை கிங்ஸ் லெவன் பறிகொடுக்க ஆட்டம் கடைசி ஓவரில்11  ரன்கள் தேவை என்ற கட்டத்தை எட்டியது, ஆனால் ராகுல், சாம் கரன் வெற்றி பெறச் செய்தனர்.

இதில் ராகுல் தொடக்கத்தில் கொஞ்சம் திணற, கெய்ல் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய இந்திய தொடக்க வீரர் மயங்க் அகர்வால் அனாயசமாக சில பவுண்டரிகளை அடித்தார் எல்லாம் கிரிக்கெட்டிங் ஷாட்கள், டி20 அராத்து ஷாட்கள் அல்ல. ராகுலை விடவும் சரளமாக ஆடிய அகர்வால் 43 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஓரு பிரமாதமான முறையான கிரிக்கெட் ஷாட்கள் ஆடங்கிய இன்னிங்ஸாகும் இது.

இந்நிலையில் ஆட்ட நாயகன் கே.எல்.ராகுல், அகர்வாலைப் பாராட்டிப் பேசியதாவது:

முதல் 2 போட்டிகளில் நான் விரும்பிய தொடக்கம் கிடைக்கவில்லை. இப்போது என்னுடைய அரைசதங்கள் அனைத்தும் இலக்கை விரட்டும்போது வந்துள்ளது, நான் என் பேட்டிங்கை மனமகிழ்ச்சியுடன் ஆடுகிறேன்.

கெய்லுடன் சில காலமாக ஆடி வருகிறேன், மயங்க்குடன் சிறுபிராயம் முதல் ஆடிவருகிறேன். மயங்க் இறங்கி ஆடிய விதம் நான் கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொள்ள உதவியது.

விரலில் காயம்பட்டு அவர் கடும் வலியில் இருந்தார், ஆனாலும் அவர் இறங்கி இப்பட்டிப்பட்டதொரு இன்னிங்ஸை ஆடுவது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.  நான் கரனிடம் சொன்னேன் சிக்ஸர்கள் அடிப்பது கடினம், எனவே இடைவெளியில் பந்தைச் செலுத்து என்றேன், ஆனால் அவர் சிக்ஸ் அடிக்க முயன்றார், நல்லவேளையாக இடைவெளிகளில் சென்றது.

இவ்வாறு கூறினார் ராகுல்.

SCROLL FOR NEXT