இங்கிலாந்துக்கு எதிரான ஒரேயொரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியதற்கு கேப்டன் தோனி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 181 ரன்கள். ஆனால் 177/5 என்று இந்தியா பின் தங்கியது.
“முதல் பந்தில் பவுண்டரி அடித்தேன், நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும் 2 பந்துகளை நான் அடித்திருக்க வேண்டும் ஆனால் அடிக்கவில்லை. பந்தை சரியாக மட்டையில் வாங்காத ஒரு தினமாக நேற்று அமைந்தது. பந்து மட்டையின் கீழ்ப் பகுதியில் பட்டது. ஆகவே தோல்விக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதுதான் சரி.
ராயுடு அப்போதுதான் களமிறங்கியிருந்தார். 6 அல்லது 7ஆம் நிலையில் களமிறங்கி நேரடியாக பெரிய ஷாட்களை அடிப்பது அவருக்குக் கடினமாக இருந்திருக்கும். அவருமே பந்துகளை மட்டையின் நடுப்பகுதியில் அடிக்க முடியாமல் இருந்தார். அதனால்தான் நானே நின்று முடிக்க முடிவெடுத்தேன், அந்தச் சமயத்தில் அப்படித்தான் யோசித்தேன். ஆனால் வெற்றி பெற முடியாமல் போனது.
அந்த ஓவரின் தொடக்கத்திலேயே நானே ஆட்டத்தை வெற்றிக்கு இட்டுச் செல்வது என்ற முடிவை எடுத்தேன். ராயுடுவும் கூட வெற்றியைச் சாதித்திருக்க முடியும், ஆனால் முடிவு நேர ஆட்டம் எனது பலம், அதனால் நானே பொறுப்பேற்றுக் கொண்டேன்” என்றார் தோனி.
பந்து வீச்சு பற்றி கூறிய தோனி, "யார்க்கர்கள் இன்னும் பெரிய கேள்வியாகவே உள்ளது. 3 ஸ்பின்னர்கள் இருந்தனர். ஆனாலும் பந்து அவர்களுக்குச் சாதகமாக இல்லை.
யார்க்கர்கள் வீச முடியவில்லை எனும் போது லைன் மற்றும் லெந்த்தை மாற்றியிருக்க வேண்டும், பந்து வீச்சாளர்களால் உடனடி சாதுரியத்துடன் வீச முடியவில்லை.” என்றார் தோனி.