விளையாட்டு

‘ஏன் ரிஷப் பந்த்தை விமர்சிக்கிறார்கள் பாவம்?’ - ‘டி20 கிரிக்கெட்டில் அதிர்ஷ்டம் விளையாடும்’- மைக்கேல் வான் ட்வீட்டும் மிட்செல் ஜான்சன் பதிலும்

செய்திப்பிரிவு

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அதிரடி இந்திய வீரர் ரிஷப் பந்த் நேற்று மும்பையில் சிக்சர் தீபங்களை ஏற்றினார். 27 பந்துகளில் 7 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என்று பலரது பந்துக்கும் பந்த் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

ஒருகட்டத்தில் 15 ஓவர்களில் 131/4 என்ற நிலையிலிருந்து அணியின் ஸ்கோர் 213/6 என்று உயர்ந்ததென்றால் அதற்கு ரிஷப் பந்த்தின் கண்மூடித்தனமான காட்டடிதான் காரணம்.  தன் இன்னிங்சில் அவர் 7 பவுண்டரிகள் 7 சிக்சர்களை விளாசினார், இப்போதைய உலகின் நம்பர் 1 பவுலர் பும்ராவுக்கும் சாத்துமுறை விழுந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி 176 வரை விரட்டியது. எனவே ரிஷப் பந்த்தின் இந்த இன்னிங்ஸ்தான் வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளியை தீர்மானித்துள்ளது.

இதற்கு முன்னர் அவர் ஒரு ரன் அவுட்டை தோனி பாணியில் முயன்று தோல்வியடைந்தது, இந்திய அணியின் தோல்விக்குக் காரணமாக, பாவம் சின்னப்புள்ளையப் போய் தோனியுடன் ஒப்பிட்டு இந்த சீர்கெட்ட நெட்டிசன்கள் தாக்கிப்பேசினர். இது அவரை ஒருவேளை உசுப்பி விட்டிருக்கலாம். இவரை ஓட்டிய நெட்டிசன்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், ரிஷப் பந்த் நேற்று ஆடிய பல ஷாட்கள் தோனியினால் இப்போது ஆட முடியாது என்பதை.

இந்நிலையில் இந்தியாவில் ரிஷப் பந்த்தை விமர்சிப்பது ஏன் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ட்வீட் செய்துள்ளார், அதில், “17 பந்துகளில் 50 ரன்கள் அடித்துள்ளார் ரிஷப் பந்த், ஏன் இந்தியாவில் அவரை விமர்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை. அவரை அவர் போக்குக்கு விட்டு விட வேண்டியதுதான்” என்று பதிவிட்டுள்ளார்.

இவருடைய இந்த ட்வீட்டுக்குப் மைக்கேல் வான் ட்விட்டர் பக்கத்திலேயே பதில் அளித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன்:

“டி20 கிரிக்கெட்டில் நிறைய அதிர்ஷ்டம் விளையாடும், பிற வடிவங்களில் அதிகத்  திறமையே தீர்மானிக்க வாய்ப்பு. ஆனால் ஒரு வீரராக எனக்கு ரிஷப் பந்த்தை பிடிக்க்கும். கிளென் மேக்ஸ்வெலுக்கும் இவருக்கும் நிறைய ஒற்றுமைகளைக் காண்கிறேன். ரிஷப் பந்த்தை வழிநடத்த சரியான ஆட்கள் தேவை என்று நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மைக்கேல் வான் பக்கத்தில் இது குறித்து பல நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT