விளையாட்டு

ஆசிய விளையாட்டில் பதக்கம்: தீபிகா பலிக்கல் நம்பிக்கை

செய்திப்பிரிவு

ஆசிய போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டில் இந்திய அணி 4 பிரிவுகளில் பங்கேற்கிறது. இவை அனைத்திலும் பதக்கம் வெல்வோம் என இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமீபத்தில் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் – ஜோஸ்னா சின்னப்பா ஜோடி தங்கம் வென்றது.

தென்கொரியாவில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. அப்போட்டியில் பங்குபெற இருப்பது குறித்து தீபிகா கூறியுள்ளது: ஆசிய விளையாட்டில் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா சார்பில் நாங்கள் பங்கேற்கும் 4 பிரிவுகளிலும் பதக்கம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. எனினும் ஆசிய விளையாட்டு என்பது காமன்வெல்த் போட்டியை விட எளிதாக இருக்கும் என்று கூறுவது தவறானது.

உதாரணமாக ஆசிய விளையாட்டில் ஸ்குவாஷ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மலேசியாவின் நிகோல் டேவிட் பங்கேற்க இருக்கிறார். இது தவிர ஹாங்காங் வீரர், வீராங்கனைகளும் கடுமையான சவால் அளிப்பார்கள். நமக்கு வாய்ப்புகள் சிறப்பாக அமையும் போது எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்றார் தீபிகா.

இந்திய முன்னணி ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷலும் உடன் இருந்தார். சர்வதேச தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள கோஷல், காமன்வெல்த் போட்டியில் 4-வது இடத்தை பிடித்தார்.

ஆசிய விளையாட்டில் பங்கேற்பது குறித்து அவர் கூறியது: முதல் ஆட்டத்தில் தரவரிசையில் 105-வது இடத்தில் உள்ள ஜோர்டான் வீரர் அமது அல்-சராஜை எதிர்கொள்கிறேன். அடுத்த ஆட்டத்தில் தரவரிசையில் 42-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் வீரர் நசீர் இக்பாலிடம் மோதுகிறேன். அடுத்த சுற்றில் 35-வது இடத்தில் உள்ள மலேசியாவின் பென் ஹீயை எதிர்கொள்கிறேன் என்றார்.

SCROLL FOR NEXT