ஐபிஎல் முதல் போட்டியில் ஆர்சிபி முதலில் பேட் செய்து வருகிறது, முதலில் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, விராட் கோலி, பார்த்திவ் படேல் தொடக்க வீரர்களாக இறங்கினர்.
தீபக் சாஹர் முதல் ஓவரை அருமையாக வீசினார். ஆனால் ஷர்துல் தாக்குர் மிட் ஆஃபில் மிஸ் பீல்ட் செய்ய பார்த்திவ் படேலுக்கு பவுண்டரி சென்று நான்கானது. முதல் ஓவர் 5 ரன்கள்.
எதிர்முனையில் ஹர்பஜன் சிங் முதல் ஓவரில் 7 ரன்கள் கொடுத்தார். மொத்தத்தில் சிக்கனத் தொடக்கமாக அமைந்தது.
இந்நிலையில் தீபக் சாஹர் தனது 2வது ஓவரை வீச வந்தார், முதல் பந்தில் கோலி 2 ரன்களை எடுத்தார். ஆனால் அடுத்த 5 பந்துகளில் கோலியால் ரன்கள் எடுக்க முடியவில்லை, 6வது பந்து நோ-பாலாக அமைய அடுத்த பந்து ஃப்ரீ ஹிட் பந்தானது.
ஆர்சிபி செம்படை ரசிகர்கள் கோலியை ஆவலுடன் சிக்சருக்காக எதிர்பார்த்தனர், ஆனால் அது தீபக் சாஹரின் அருமையான யார்க்கராக அமைய ரன் வரவில்லை, ஃப்ரீஹிட்டில் கோலியால் ரன் எடுக்க முடியவில்லை.
வெறுப்பு கோலியின் உடல் மொழியில் தெளிவாகத் தெரிந்தது. அடுத்த ஓவரை ஹர்பஜன் சிங் வீச 3வது பந்து கோலியை நோக்கி உள்ளே வந்தது கொஞ்சம் ஷார்ட் பிட்ச் பந்து. மட்டைக்கு அடிக்குமாறு வரவில்லை, கோலி இழுத்து புல்ஷாட் ஆடினார். நேராக லெக் திசையில் ஜடேஜா கையில் போய் உட்கார்ந்தது.
விராட் கோலி 12 பந்துகளில் 6 ரன்களில் ஹர்பஜனிடம் வீழ்ந்தார். 5 ஓவர்கள் முடிவில் 28/1 என்று ஆர்சிபி நல்ல தொடக்கம் காணவில்லை. 6 ஓவர்கள் பவர் ப்ளே முடிவில் ஆர்சிபி 33/2 என்று சொதப்பி வருகிறது.