விளையாட்டு

விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதில்லை: ஷிகர் தவண் பேட்டி

பிடிஐ

என் மீது எழும் விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் கூறினார்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 6 மாதங்களாக ஷிகர் தவண் சதம் விளாசவில்லை. இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4–வது ஒருநாள் போட்டியில் அவர் 143 ரன்களைக் குவித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதுகுறித்து நேற்று அவர் கூறும்போது, “நான் சரியாக விளையாடாதபோது என் மீது கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. இது அனைத்து வீரர்களுக்கும் வருகின்ற பிரச்சினைதான்.

என் மீதான விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதில்லை. நான் அதற்கு பதிலும் சொல்வதில்லை. முதலில் நான் செய்தித்தாள்கள் எதையும் படிப்பதில்லை. நான் விரும்பாத விஷயங்களை அதிலிருந்து நான் எடுத்துக் கொள்வதில்லை. எனவே என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது.

நான் என்னுடைய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனவே, நான் எந்தத் திசையில் செல்லவேண்டும் என்பதை நானே முடிவு செய்துகொள்கிறேன். அமைதியாக இருக்கும்போது சிறப்பாக விளையாட முடியும் என்று நம்புகிறேன். சிரிப்பது அல்லது சோகமாக இருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

ஒரு விஷயத்தால் நான் காயமடைந்தேன் என்று வைத்துக் கொண்டால், அதை நான் விரைவில் கடந்து சென்றுவிடுவேன். என்னைப் பற்றி யார் என்ன எழுதுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்பவில்லை. என்னுடைய வளர்ச்சியை நோக்கி சாதகமான அடிகளை எடுத்து வைக்கிறேன் என்பதில் உறுதியாக உள்ளேன்” என்றார்.

SCROLL FOR NEXT