கேப்டன் வில்லியம்ஸனின் இரட்டை சதம், ராவல், லதாம் ஆகியோரின் சதம் ஆகியவற்றால், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 715 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
கடந்த 2014-ம் ஆண்டு ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிராக 690 ரன்கள் சேர்த்ததே நியூசிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இதை இப்போது முறியடித்து விட்டது நியூசிலாந்து.
தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய வங்கேதசம் அணி 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.
மில்டனில் வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி, 59.2 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக தமிம் இக்பால் 126 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூஸிலாந்து தரப்பில் வாக்னர் 5 விக்கெட்டுகளையும், சவுதி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் சேர்த்திருந்தது. நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்கரர்கள் ராவல், லதாம் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இருவரையும் பிரிக்க வங்கதேச அணியின் கேப்டன் மெகமதுல்லா 7 பந்துவீச்சாளர்களை மாற்றியும் பலனில்லை. இருவரையும் ஆட்டமிழக்கச் செய்வதற்குள் வங்கதேச வீரர்கள் வெறுத்துப் போயினர்.
அதிரடியாக ஆடிய ராவல், லதாம் ஆகிய இருவரும் சதம் அடித்தனர். ராவல் 132 ரன்களில் ஆட்டமிழந்தார்,(19 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) முதல் விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்துக் களமிறங்கிய கேப்டன் வில்லியம்ஸன், லதாமுடன் சேர்ந்தார். இருவரின் அதிரடியாக ஸ்கோர் 300 ரன்களைக் கடந்தது. லதாம் 161 ரன்களில் ஆட்டமிழந்தார் (17 பவுண்டரி, 3 சிக்ஸர்).
2-ம் நாள் ஆட்டநேர முடிவான நேற்று, கேப்டன் வில்லியம்ஸன் 93 ரன்களிலும், வாக்னர் ஒரு ரன்னிலும் களத்தில் இருந்தனர். நியூஸிலாந்து அணி, 4 விக்கெட் இழப்புக்கு 451 ரன்கள் சேர்த்திருந்தது.
இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை இருவரும் தொடர்ந்தனர். நிதானமாக ஆடிய வில்லிம்ஸன் தனது டெஸ்ட் அரங்கில் 20-வது சதத்தை நிறைவு செய்தார். விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தபோதிலும் சளைக்காமல் ஆடிய வில்லியம்ஸன், இரட்டை சதம் அடித்தார்.
மேலும், டெஸ்ட் அரங்கில் மிகவேகமாக 71 போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களைக் கடந்த நியூஸிலாந்து வீரர் எனும் பெருமையைப் பெற்றார். கேப்டன் வில்லியம்ஸன் கடந்த 8 டெஸ்ட் போட்டிகளில் ஏறக்குறைய 900 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வில்லியம்ஸனுக்கு துணையாக பேட் செய்த நிகோலஸ் 53 ரன்களிலும், வாக்னர் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கிராண்ட் ஹோம் அதிரடியாக பேட் செய்து அரை சதம் அடித்தார்.
நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 715 ரன்கள் சேர்த்திருந்த போது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. வில்லியம்ஸன் 200 ரன்கள்(19 பவுண்டரி), கிராண்ட்ஹோம் 76 ரன்கள்(4 பவுண்டரி, 5 சிக்ஸர்) சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
வங்கதேசம் தரப்பில் மெஹதி ஹசன், சவுமியா சர்க்கார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
481 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. வங்கதேசத்துக்கு தமிம் இக்பால், இஸ்லாம் ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அளித்தனர். 88 ரன்கள் வரை தாக்குப்பிடித்த இந்த ஜோடி பிரிந்தது. இஸ்லாம் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மொமினுள் ஹக் (8), மிதுன் டக் அவுட்டிலும் டிரன் போல்ட் பந்துவீச்சில் வெளியேறினர். நிதானமாக ஆடிய தமிம் இக்பால் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். 88 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த வங்கதேசம், 122 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
சவுமியா சர்க்கார் 39 ரன்களிலும், மெகமதுல்லா 15 ரன்களிலும் களத்தில் உள்ளனர். 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில், 301 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் அணி இருக்கிறது.
இன்னும் 2 நாட்கள் மீதம் இருக்கும் நிலையில் 6 விக்கெட்டுகள் கைவசம் இருந்தாலும் 301 ரன்களைக் கடந்து, முன்னிலை ரன்களை வங்கதேசம் பெறுவது கடினம். தற்போதுள்ள நிலையில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க வங்கதேசம் அணி போராடி வருகிறது.