விளையாட்டு

பெயர் மாற்றம் கைகொடுக்குமா டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு?- மும்பை இந்தியன்ஸுடன் இன்று மோதல்

செய்திப்பிரிவு

ஐபிஎல் தொடரின் 2-வது நாளான இன்று இரு ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் சொந்த மைதானமான வான்கடேவில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது. உலகக் கோப்பை தொடர் நெருங்குவதால் மும்பையில் உள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரது பணிச்சுமையை பெரிதும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இதில் ஹர்திக் பாண்டியா கடந்த 6மாதங்களில் இருமுறை முதுகுவலி காயத்தால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாககடந்த செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடரில் இருந்தும், சமீபத்தில் ஆஸ்திரேலிய தொடரில் இருந்தும் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் முன்னணிவேகப்பந்து வீச்சாளர்களில் ஒரு வராக உருவெடுத்துள்ள பும்ராவின் பணிச் சுமையையும் ஐபிஎல் தொடரில் இந்திய அணி நிர்வாகம் நெருக்கமாக கவனிக்கக்கூடும்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான லஷித் மலிங்கா முதல் 6 ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை உருவாகி உள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்யும் விதமாக அந்நாட்டு வீரர்கள் அனைவரையும் உள்ளூர் போட்டியில் விளையாட உத்தரவிட்டுள்ளது. இதனால் மலிங்கா அந்தத் தொடரில் பங்கேற்றுவிட்டுதான் ஐபிஎல் தொடருக்கு திரும்புகிறார்.

மலிங்கா இல்லாத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பும்ராவை மையமாக கொண்டேஅமையும். இதனால் பணிச்சுமையை கையாள்வதில் பும்ரா கூடுதல் கவனம்செலுத்தக்கூடும். உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இம்முறை ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாதொடக்க வீரராககளமிறங்க உள்ளார்.இதனால் அவரிடம் இருந்து பெரிய அளவிலான இன்னிங்ஸ்கள் வெளிப்டக்கூடும்.

சுழற்பந்து வீச்சில் கிருணல் பாண்டியா, மயங்க் மார்க்கண்டே ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர் கள். இவர்களுடன் ஜெயந்த் யாதவ், அனுகுல் ராய், ராகுல் ஷாகர் ஆகியோரும் அணியில் உள்ளனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி இம்முறை டெல்லி கேபிடல்ஸ் என்ற பெயர் மாற்றத்துடன் களமிறங்குகிறது. கடந்த சில சீசன்களில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த ஷிகர் தவண் இம்முறை டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக களமிறங்குகிறார்.

பிரித்வி ஷா, மன்ஜோத் கர்லாபோன்ற இளம் இந்திய வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களான கிறிஸ் மோரிஸ், காலின் மன்றோ ஆகியோரது அதிரடி பேட்டிங்கும் அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் டிரென்ட் போல்ட், இஷாந்த் சர்மா, காகிசோ ரபாடா, நது சிங் ஆகியோர் எதிரணிக்கு சவால்தரக்கூடும்.

ஹைதராபாத் - கொல்கத்தா மோதல்

முன்னதாக மாலை 4 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இருமுறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், 2016ம் ஆண்டு சாம்பின் பட்டம் வென்ற ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் மோதுகிறது.

ஹைதராபாத் - கொல்கத்தா

நேரம் : மாலை 4 மணி

மும்பை - டெல்லி

நேரம் : இரவு 8 மணி

நேரடி ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

அணிகள் விவரம்

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கேப்டன்), குயிண்டன் டி காக், எவீன் லீவிஸ், ஹர்திக் பாண்டியா, கிருணல் பாண்டியா, கெய்ரன் பொலார்டு, யுவராஜ் சிங், சூர்யகுமார் யாதவ், லஷித் மலிங்கா, மயங்க் மார்க்கண்டே, பென் கட்டிங், ஜேசன் பெஹ்ரன்டார்ப், ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் ஷாகர், பங்கஜ் ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சித்தேஷ் லாட், மிட்செல் மெக்லீனஹன், ஆடம் மில்னே, அனுகுல் ராய், ரஷிக் சலாம், அன்மோல்பிரீத், பரிந்தர் சரண், ஆதித்யா தாரே, ஜெயந்த் யாதவ்.

டெல்லி கேபிடல்ஸ்: ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ஷிகர் தவண், ரிஷப் பந்த், பிரித்வி ஷா, காலின் இங்க்ராம், மன்ஜோத் கர்லா, சேர்பான் ரூதர்போர்டு, அமித் மிஸ்ரா, அவேஷ் கான், பண்டாரு ஐயப்பா, ஹர்ஷால் படேல், இஷாந்த் சர்மா, காகிசோ ரபாடா, நது சிங், சந்தீப் லமிசான், டிரென்ட் போல்ட், அக்சர் படேல், கிறிஸ் மோரிஸ், காலின் மன்றோ, ஹனுமா விகாரி, சக்சேனா, கீமோ பால், ராகுல் டிவாட்டியா, அங்குஷ் பெயின்ஸ்.

SCROLL FOR NEXT