விளையாட்டு

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்: எந்த வரிசையிலும் களமிறங்கி நொறுக்க தயார்

பிடிஐ

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரிஷப் பந்த், தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

12-வது ஐபிஎல் போட்டியின் 3-வது லீக் ஆட்டம் மும்பையில் நேற்று இரவு நடந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடியது.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது. 214 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 37 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய டெல்லி அணி வீரர் ரிஷப் பந்த் 27 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்தார். 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்களில் 3-வதாக இடம் பெற்றார் ரிஷப் பந்த்.

அதுமட்டுமல்லாமல் தோனியின் சாதனையையும் 21வயது ரிஷப்பந்த் முறியடித்துள்ளார். இதற்கு முன் கடந்த 2012-ம் ஆண்டு, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோனி அதிவேகமாக 20 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். இப்போது ரிஷப் பந்த் 18 பந்துகளில் அரைசதம் அடித்து முறியடித்துவிட்டார்.

ஆனால், ஐபிஎல் போட்டியைப் பொறுத்தவரை அதிகவேகமாக அரைசதம் அடித்தவர்களில் கே.எல்.ராகுல் 14பந்துகளில் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். 15 பந்துகளில் சுனில் நரேன், யூசுப் பதான் அரைசதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி முடிந்ததும், ரிஷப்பந்த் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " நான் அணியில் எந்த வரிசையிலும் களமிறங்க நிர்வாகம் விருப்பப்படுகிறதோ அந்த வரிசையில் களமிறங்கி அடித்து நொறுக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு இது மிகப்பெரிய பயணமாக அமைந்திருக்கிறது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டு வருகிறேன். நாம் அடித்து ஆடும் போது நம்முடைய அணி வெற்றி பெற்றால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் என்னைப் பொருத்தவரை சூழலுக்கு ஏற்றார்போல்தான் விளையாடுகிறேன்.

இந்த போட்டியில் அணியின்  ரன்ரேட்டை உயர்த்த வேண்டிய தேவை இருந்தது, அதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டேன். டி20 போட்டித் தொடரில் நாம் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும். பந்துவீச்சாளர்கள் தனக்கென அடையாளத்தை உருவாக்க விரும்பினால், நாம் பதிலுக்கு தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் " எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT