முஷ்டாக் அலி டி20 போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக ஆடிய புஜாரா 61 பந்துகளில் சதம் அடித்து, தன்னை டி20 வீரராக நிரூபித்துள்ளார்.
டெஸ்ட் போட்டி வீரராக மட்டுமே கருதப்பட்டு வந்த புஜாரா, தான் ஒருநாள் போட்டிக்கும், டி20 போட்டிக்கும் ஏற்றார்போல் அதிரடியாக பேட் செய்ய இயலும் என்பதை பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கு தனது பேட்டிங்கால் உணர்த்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் புஜாராவின் பேட்டிங் தனித்தன்மையாக இருந்தது. அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்ற புஜாரவின் பேட்டிங் முக்கியக் காரணமாக அமைந்தது.
ஆனால் என்னவோ புஜாராவை ஒருநாள் போட்டிகளுக்கும், டி20 தொடருக்கும் தேர்வு செய்ய பிசிசிஐ மறுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் ஏலத்தில் புஜாராவின் பெயர் இருந்தும் டெஸ்ட் போட்டி வீரர் என்று கருதி அவரை ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. இவை அனைத்துக்கும் புஜாரா தனது பேட்டிங்கால் இன்று பதில் அளித்துள்ளார்.
இந்தூரில் இன்று நடந்த முஷ்டாக் அலி டி20 போட்டியில் ரயில்வேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புஜாரா சதம் அடித்தநிலையிலும் அவர் சார்ந்திருக்கும் சவுராஷ்டிரா அணி தோல்வியை தழுவியது.
டாஸ் வென்ற ரயில்வேஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது.
இதில் தொடக்க வீரர்கள் புஜாரா, தேசாய் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய புஜாரா 29 பந்துகளில் அரைசதத்தையும், அடுத்த 32 பந்துகளில் மற்றொரு அரைசதம் அடித்து 61 பந்துகளில் புஜாரா சதம் அடித்தார். ராபின் உத்தப்பா 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
புஜாரா 61 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடங்கும்.
இதுவரை மாநில அளவிலான டி20 போட்டிகளில் மட்டுமே புஜாரா விளையாடியுள்ளார், ஆனால் சர்வதேச அளவிலான போட்டியில் இந்திய அணியில் இடம்பெறவில்லை. 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 1096 ரன்கள் குவித்துள்ளார். சவுராஷ்டிரா அணித் தரப்பில் டி20 போட்டியில் சதம் அடித்த முதல்வீரர் புஜாரா எனும் பெருமையைப் பெற்றார்.
189 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ரயில்வேஸ் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரயில்வேஸ் தரப்பில் அதிகபட்சமாக பிரதாம் சிங் 40, தேவ்தார் 49 ரன்கள் சேர்த்தனர்.