குவஹாத்தியில் நடைபெறும் தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட மாட்டேன் என்று முந்தைய சாம்பியன் சாய்னா நெவால் மறுத்துள்ளதால் சர்ச்சை கிளம்பியது.
பிப்.14 ஆன இன்று ஒற்றையர் ஆட்டத்தில் ‘மோசமான ஆட்டக்களம்’ என்பதைக் காரணம் காட்டி சாய்னா நெவால் விளையாட மறுத்துள்ளார்.
சமீர் வர்மா தன் ஒற்றையர் ஆட்டத்திலிருந்து குதிகால் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதையடுத்து ஆட வந்த சாய்னா நெவால் இது மோசமான ஆட்டக்களம் என்று ஆட மறுத்தார்.
ஷுருதி மந்ததாவுக்கு எதிரான போட்டியை ஆடுவதாக இருந்த சாய்னா நெவால் களத்தைப் பார்த்து விட்டு அனைத்து இங்கிலாந்து தொடர் அருகில் வருகிறது, இந்நிலையில் இந்தக் களத்தில் ஆடினால் காயமடைந்து விடுவோம் என்று விலகினார்.
பிறகு இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பின் செயலாளர் ஓமர் ரஷீத் உள்ளிட்டோர் களத்தில் குதித்து சாய்னா நெவால், காஷ்யப், சாய் பிரனீத் ஆகியோரை ஆடுமாறு கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து மாலையில் விளையாட ஒப்புக் கொண்டனர்.
அசாம் பேட்மிண்டன் அகாடெமியின் 3 களத்தில் இந்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுகிறது. சாய்னா நெவால் மோசம் என்று கூறிய ஆட்டக்களத்தில்தான் சிந்து காலையில் விளையாடி வெற்றி பெற்றார்.
ஆட்டக்களம் சில இடங்களில் மேடு பள்ளமாக இருந்ததே சாய்னா நெவால் உள்ளிட்ட 3 வீரர்கள் ஆட மறுத்ததற்கான காரணம் ஆகும், இந்நிலையில் உள்ளரங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த களத்தையும் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்திய பாட்மிண்டன் கூட்டமைப்புச் செயலாளர் உறுதியளித்துள்ளார்.