அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்ற வீராங்கனை சானியா மிர்ஸாவிற்கு, தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ஒரு கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கி பாராட்டினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் சமீபத்தில் நடந்தன. இதில் இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார். இந்த வெற்றியைத் தெலங்கானா மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என அவர் தெரிவித்திருந்தார். தற்போது தெலங்கானா மாநிலத்தின் தூதராக உள்ள இவர், கோப்பையை வென்றதால், தெலங்கானா அரசு சானியா மிர்ஸாவிற்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்தது.
ஏற்கெனவே அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள தேவையான பயிற்சிக்கு முதல்வர் கே. சந்திர சேகர ராவ் சானியா மிர்ஸாவிற்கு ரூ. 1 கோடி ஊக்க தொகையாக வழங்கினார். இந்நிலையில், கோப்பையை வென்ற சானியா மிர்ஸாவிற்கு வியாழக்கிழமை மதியம் ஹைதராபாத்தில், முதல்வர் கே. சந்திர சேகரராவ், ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.