விளையாட்டு

பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படங்கள் நீக்கம்: மொஹாலி கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை

ஐஏஎன்எஸ்

புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, மொஹாலி கிரிக்கெட் அரங்கில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளன.

பஞ்சாப் மாநிலம், மொஹாலி கிரிக்கெட் சங்கம் சார்பில் மொஹாலி கிரிக்கெட் மைதானம் உள்ளது. இங்குள்ள அரங்கில் வீரர்கள் ஓய்வறைகள், அலுவலகங்கள், நடைபாதைகள், புகைப்பட அரங்கு ஆகியவற்றில் பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. புல்வாமா தாக்குதலைக் கண்டித்து இங்கு வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் வீரர்கள் அனைவரின் புகைப்படங்களும் நேற்று அகற்றப்பட்டன.

இது குறித்து பஞ்சாப் கிரிக்கெட் அமைப்பின் பொருளாளர் அஜெய் தியாகி கூறுகையில், "புல்வாமா தாக்குதலில் நமது சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக, மொஹாலி கிரிக்கெட் அரங்கில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் வீரர்களின் அனைத்து புகைப்படங்களும் அகற்றப்பட்டன. பாகிஸ்தானுக்கு எதிரான எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் வெளிப்படுத்தி இருக்கிறோம். ஏறக்குறைய 15 வீரர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான், ஜாவித் மியான்தத், ஷாகித் அப்ரிடி உள்ளிட்டோர் புகைப்படமும் நீக்கப்பட்டன " எனத் தெரிவித்தார்.

கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் இங்கு நடந்தது. இந்தப் போட்டியை அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், யூசுப் ராசா கிலானி உள்ளிட்ட முக்கிய விஐபிக்கள் போட்டியைக் கண்டு ரசித்தனர்.  இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT