கான்பெராவில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தில் இலங்கை வீரர் குசல் பெரேரா பவுன்சரில் அடி வாங்கியதில் தலையில் காயம் ஏற்பட மைதானத்திலிருந்து வெளியேறினார்.
123/3 என்ற நிலையில் இன்று ஆட்டம் இலங்கை முதல் இன்னிங்ஸுடன் தொடங்கிய போது 11 ரன்களில் இருந்த குசல் பெரேரா 27 ரன்கள் எடுத்திருந்த போது ஜை ரிச்சர்ட்ஸன் பவுன்சர் ஒன்றிற்கு குசல் பெரேரா கண்களை பந்திலிருந்து எடுக்க ஹெல்மெட்டின் பக்கவாட்டுப் பகுதியில் வலது காதுக்கு அருகில் பந்து தாக்கியது. குசல் பெரேரா நேராகத்தான் நின்றார், விழவில்லை, ஆனால் ஹெல்மெட்டின் அப்பகுதியைக் காக்கும் காப்பு பெயர்ந்தது.
உடனேயே களத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே ஓவரில் பிறகு 2 ஷார்ட் பிட்ச் பந்துகளை புல்ஷாட்டும் ஆடினார்.
ஆனால் அடுத்த ஓவரில் ரன்னர் முனையில் இருந்த குசல் பெரேரா சற்றே தள்ளாடினார், உடனே களத்திலிருந்து வெளியேற முடிவெடுத்தார். எல்லைக்கோட்டருகே செல்லும் போது அவருக்கு லேசான தலைசுற்றல் இருந்தது, அணியின் உடற்கூறு மருத்துவர் குசல் உதவிக்கு வந்தார்.
இதனையடுத்து உள்ளே எதுவும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற முன்னெச்சரிக்கையில் அவருக்குப் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் அவர் 2வது இன்னிங்சில் களமிறங்குவாரா என்பது பற்றிய முடிவு இன்னமும் தெரியவில்லை.
திமுத் கருணரத்னே இதே இன்னிங்சில் பாட் கமின்ஸ் பந்தில் அடிபட்டு மைதானத்திலேயே சாய்ந்தார், ஆனால் அதன் பிறகு சிகிச்சை பெற்று அவருக்கு ஒன்றும் பெரிய காயமில்லை என்று முடிவானவுடன் இறங்கி தைரியமான அரைசதத்தை எடுத்து கடைசியில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி தன் முதல் இன்னிங்சில் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாலோ ஆன் கொடுக்காத ஆஸ்திரேலியா மீண்டும் பேட் செய்து ஆடிவருகிறது, அந்த அணி 119/3 என்று 438 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.