செயிண்ட் லூசியாவில் மே.இ.தீவுகளுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஷனன் கேப்ரியலுக்கும், ஜோ ரூட்டுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதத்தில் ஷனன் கேப்ரியல், ஜோ ரூட்டை நோக்கி என்ன கூறினார் என்பது தெரியவில்லை, ஆனால் ஜோ ரூட், ஷனன் கேப்ரியலிடம் கூறியதாக ஸ்டம்ப் மைக்கில் கேட்டது என்னவெனில், “தன்பாலின உறவாளராக இருப்பதில் தவறில்லை” என்று ஜோ ரூட் கூறியதாகத் தெரிகிறது.
ஆனால் இத்தகைய ஒரு கருத்தை ஜோ ரூட் கூறுவதற்குக் காரணமான ஷனன் கேப்ரியலின் வசை என்னவென்று தெரியவில்லை. ஆனால் நடுவர்கள் ஷனன் கேப்ரியலிடம் ஏதோ பேசினர்.
ஆனால் ஆட்டம் முடிந்தவுடன் ஜோ ரூட் இது பற்றி பெரிதாகக் கவலைப்படாமல், “சில வேளைகளில் களத்தில் வேகத்தில் சில வீரர்கள் சில வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தி பிறகு அதற்காக வருத்தப்படுவார்கள்.
ஷனன் கேப்ரியல் ஒரு உணர்ச்சிவசப்படும் வீரர். ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்ல தன்னால் முடிந்தது அனைத்தையும் செய்வார். அவர் நல்ல கிரிக்கெட் வீரர், இந்தத் தொடர் அவருக்கு நன்றாக அமைந்தது. அதனால் அவர் கொஞ்சம் கர்வமாகவே செயல்படுவார், இதில் தவறொன்றுமில்லை.
களத்தில் கூறுவது களத்தோடு போக வேண்டும். பெரிது படுத்தக் கூடாது.
மே.இ.தீவுகளின் இடைக்காலப் பயிற்சியாளர் ரிச்சர்ட் பைபஸ், ‘என்னிடம் புகார் எதுவும் வரவில்லை, ஆனால் முறையற்றதாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்’ என்று கூறியுள்ளார்.
மே.இ.தீவுகளின் வானொலிகளில் பாடல்கள் பலவற்றின் பொருள் தன்பாலின சேர்க்கைப் பற்றிய வரிகளாகவே இருப்பதுண்டு. பிரிட்டன் போன்ற நாடுகளில் இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும். எனவே ஷனன் கேப்ரியல் ஏதோ வசைபாட, ஜோ ரூட் மே.இ.தீவுகளின் கலாச்சாரமாக வெள்ளையர்கள் வரிந்து கொண்டதை எதிர்வசையாகப் பயன்படுத்தினாரா என்பதெல்லாம் தெரியவில்லை.
இந்த விவகாரம் பெரிதானால் இவையெல்லாம் தெரியவரும். 3ம் நாளான நேற்று ஜோ ரூட் 2வது இன்னிங்சில் தன் 16வது டெஸ்ட் சதத்தை எடுத்து 111 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்கிறார். இங்கிலாந்து அணி 448 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது.