விளையாட்டு

ஐசிசி எச்சரிக்கை பலித்தது: தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கில் மிரண்ட சீபெர்ட்

செய்திப்பிரிவு

தோனி ஸ்டெம்புக்குப் பின்னால் இருந்தால், பேட்ஸ்மேன்கள் கிரீசை விட்டு செல்லாமல் இருக்கவும் என்று ஐசிசி விடுத்த எச்சரிக்கை பலித்துவிட்டது.

ஹேமில்டனில் இன்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கிற்கு நியூசி. பேட்ஸ்மேன் சீபெர்ட் இரையாகினார்.

சர்வதேச கிரிக்கெட் உலகில், இன்றுள்ள அணிகளில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக தோனி வலம் வருகிறார். அவரின் ஸ்டெம்பிங் திறன், ரன் அவுட் செய்யும் திறன் அனைத்தும் சமயோசிதமாக இருக்கும். அதிலும், ஸ்டெம்பிங் என்பது, பேட்ஸ்மேன் தலையைத் திருப்பும் நேரத்துக்குள் அனைத்தும் முடிந்துவிடும். தோனியின் ஸ்டெம்பிங்கில் வேகமும், துல்லியமும் தப்பவே தப்பாது.

அதேபோல இன்று நடந்த போட்டியில் 8 ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை சீபெர்ட் எதிர்கொண்டார். சீபெர்ட் தனது காலை கிரீசுக்குள் வைத்திருக்கிறேனா என்று திரும்புவதற்குள் தோனி ஸ்டெம்பிங் பணியை முடித்துவிட்டார். மூன்றாவது நடுவருக்கு அப்பீல் செய்யவே, ரீப்ளே காட்சியில் தோனியின் துல்லிய ஸ்டெம்பிங் தெளிவாகத் தெரிந்தது. சீபெர்ட் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடக்க வீரர்களாக முன்ரோ, சீபெர்ட் சேர்ந்து இந்தியப் பந்துவீச்சை துவம்சம் செய்த நிலையில், சீபெர்ட் விக்கெட்டை கழற்றினார் தோனி.

இதேபோலவே ஒருநாள் தொடரிலும் தோனியின் சமயோஜிதமான ரன் அவுட் அனைவராலும் பாராட்டப்பட்டது.

ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் 37-வது ஓவரின் 2-வது பந்தை கேதார் ஜாதவ் வீச நீஷம் நன்றாகக் காலை நீட்டி ஸ்வீப் ஆட முயன்றார். பந்து சிக்கவில்லை, கால்காப்பில் பட்டு பந்து பின்னால் தோனியிடம் சென்றது தனையடுத்து ஜாதவ் எல்.பி.முறையீடு எழுப்பினர். ஆனால் அது ஸ்டெம்ப் லைனுக்கு வெளியே காலில் வாங்கிய பந்து என்பதால் எல்.பி.கிடையாது. பந்து பின்னால் தோனியிடம் சென்றதை அறியாத ஜேம்ஸ் நீஷம் கிரீசுக்கு வெளியே இருந்தார். தோனி அமைதியாக 2 அடி வந்தார், எல்.பி. அப்பீல் செய்தார்.

ஆனாலும் நீஷம் வெளியில் இருந்த வாய்ப்பை மிகச்சாமர்த்தியமாகக் கையாண்ட தோனி பந்தை அண்டர் ஆர்ம் த்ரோ மூலம் ஸ்டம்பை நோக்கி எறிந்தார், பந்து ஸ்டெம்பில் பட நீஷம் ரன் அவுட் ஆனார்.

SCROLL FOR NEXT