விளையாட்டு

"நீங்கள் அரசியல் செய்ய எங்களுக்கு எதிராகப் பேசுகிறீர்களா?": கங்குலியை காட்டமாக விமர்சித்த மியான்தத்

ஐஏஎன்எஸ்

அரசியலில் நிற்பதற்காகவோ அல்லது முதல்வராக வருவதற்காகவோ சவுரவ் கங்குலி எங்களுக்கு எதிராகப் பேசுகிறார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் காட்டமாக விமர்சித்துள்ளார்.

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி விளையாடக் கூடாது என்ற கோரிக்கை வலுத்துள்ளது. முன்னாள் வீரர்கள், இந்திய அணிவீரர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

, பாகிஸ்தான் அணியை உலகக் கோப்பையில் தடை செய்ய பிசிசிஐ ஐசிசியிடம் வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

இதற்கிடையே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி புல்வாமா தாக்குதலுக்கு எதிராக வெளியிட்ட கருத்தில், " பாகிஸ்தானுக்கு எதிராக பிசிசிஐ கடினமான நிலைப்பாடு எடுக்க வேண்டும் " எனத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் டான் நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

சவுரவ் கங்குலி அரசியலில் குதிக்கப் போகிறாரா அல்லது தேர்தலில் நிற்கப்போகிறாரா. அரசியலில் விளம்பரம் தேடுவதற்காக எங்களுக்கு எதிராகப் பேசுகிறார் என்று நினைக்கிறேன். தேர்தலில் நின்று முதல்வராகும் நோக்கில் மக்களைக்  கவர்வதற்காகப் பாகிஸ்தானுக்கு எதிராகப் பேசுகிறார்.

உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை எந்தவிதத்திலும் தடை செய்ய முடியாது. பிசிசிஐ கோரிக்கையை ஒருபோதும் ஐசிசி செவிமெடுத்துக் கேட்கமாட்டார்கள். ஏனென்றால், ஐசிசி உறுப்பினர்கள் அனைவரும் அதன் போட்டியில் பங்கேற்க உரிமை உண்டு.

இவ்வாறு மியான்தத் தெரிவித்தார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலைப் குறிப்பிட்டு, இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பதைத் தடை செய்ய வேண்டும் என்று ஐசிசியிடம் பிசிசிஐ வலியுறுத்த முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

          
SCROLL FOR NEXT