விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்: உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவதில் சிக்கல்?

செய்திப்பிரிவு

உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஆடும் சர்வதேச ஒருநாள், டி20 தொடரான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முதுகுக் காயத்தினால் ஹர்திக் அவதிப்படுவதால் அவர் ஆஸ்திரேலியா தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிக்கை தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் முதல் இவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் உடல் வலுசேர்ப்பு மற்றும் சில பயிற்சிகளில் ஈடுபடுவார்.  ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால் ஜடேஜா ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், பாண்டியா இல்லாத இந்திய டி20 அணி 14 வீரர்களை கொண்டதாகவே இருக்கும்.

2 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (24ம் தேதி) விசாகப்பட்டிணத்தில் நடைபெறுகிறது.

ஒருநாள் தொடர் மார்ச் 3ம் தேதி ஹைதராபாத்தில் முதல் போட்டியுடன் தொடங்குகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே மாதம்தான் நடைபெறுகிறது என்றாலும் அதற்கு முன்னதாக சர்வதேச போட்டி இல்லாததாலும், காயங்கள் பிரச்சினை பாண்டியாவுக்கு சிலகாலமாக இருந்து வருவதாலும் உலகக்கோப்பை அணியில் அவரது இடம் இந்தக் காயத்தின் மூலம் கேள்விக்குறியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23-ல் தொடங்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா ஒரு சில ஐபிஎல் போட்டிகளையும் கூட இழக்க நேரிடலாம் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT