விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு நான்காவது தங்கம்

செய்திப்பிரிவு

17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த 65 கிலோ பிரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியின் இறுதிச் சுற்றில், தஜிகிஸ்தானின் சலீம்கான் யுசுபோவை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இந்தியாவின் யோகேஷ்வர் தத் தங்கம் வென்றார்.

இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் தங்கம் வெல்லும் இந்தியாவின் 28ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது. நேற்று நடந்த போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. இதன் மூலம் பதக்கப்பட்டியலில் 4 தங்கங்களுடன் இந்தியா 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

வெள்ளி

20 கி.மீ மகளிர் நடைப்போட்டியில் இந்தியாவின் குஷ்பிர் கவுர் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் 1:33:07 மணி நேரத்தில் இலக்கை அடைந்தார். சீன வீராங்கனை லு ஜியுஸி 1:31:07 மணி நேரத்தில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். குஷ்பிர் கவுர் 1:33:37 என்ற தனது முந்தைய தேசிய சாதனையை முறியடித்தார்.

6 வெண்கலம்

மகளிர் 3,000 மீட்டர் நடைப்போட்டியில் இந்தியாவின் லலிதா பாபர் வெண்கலப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை சுஜாதா சிங், நான்காமிடம் பிடித்தார். பஹ்ரைனின் ரூத் ஜெபட் தங்கம் வென்றார். போட்டியில் வென்ற போதும், விதிமீறலுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், ஆலோசனைகளுக்குப் பிறகே தங்கப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.

ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டி அரையிறுதியில் ஜப்பானின் யோஷிடோ நிஷிகோவிடம் இந்தியாவின் யூகி பாம்ப்ரி தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கம் வென்றார். மகளிர் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சானியா-பிரார்த்தனா ஜோடி தைபேயின் சியா-சான் ஜோடியிடம் தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கம் வென்றது. 400 மீட்டர் தடகளப் போட்டியில் இந்தியாவின் பூவம்மா ராஜு வெண்கலப் பதக்கம் வென்றார். சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் மஞ்சு பாலா 60.47 மீ. தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.ஆண்கள் 400 மீட்டர் தடகளப் போட்டியில் ராஜிவ் ஆரோக்கியா வெண்கலப் பதக்கம் வென்றார்.

டென்னிஸ்

கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா-மைனானி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சனம் சிங்-சேகத் மைனானி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. ஆடவர் இரட்டையர் டென்னிஸில் மற்றொரு இந்திய ஜோடி பாம்ப்ரி-சரண் ஜோடி தோல்வியுற்றது.

குத்துச் சண்டை

பெண்கள் 48-51 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டைப் போட்டியில் சீனாவின் ஹைஜூனை வீழ்த்திய இந்தியாவின் மேரி கோம் அரையிறுதிக்குள் நுழைந்தார். இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகள் பூஜா, சரிதா தேவி ஆகியோரும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளனர். இதனால்,மேலும் 3 பதக்கங்கள் உறுதியாகி யுள்ளன.

கபடி

கபடிப் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் முதல் சுற்றில் வங்க தேச அணிகளை வீழ்த்தியுள்ளன. மகளிர் 200 மீட்டர் ஹெப்ட்தலான் போட்டியில் சுஷ்மிதா ராய் சிங், ஸ்வப்னா பர்மன் ஆகியோர் மூன்றாவது இடம் பிடித்தனர்.

ஏமாற்றங்கள்

கூடைப்பந்துப் போட்டி காலிறுதியில் இந்திய மகளிரணி ஜப்பானுக்கு எதிராக 37-70 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியுற்றது. வில்வித்தை ரிகர்வ் பிரிவில், இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கத்துக்காக ஜப்பானுடன் மோதி தோல்வியடைந்தது. டேபிள் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டியில், இந்திய ஆடவர் அணி தென்கொரியாவிடமும், மகளிர் அணி சீனாவிடமும் 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியுற்றன.

97 கிலோ ஆடவர் பிரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சத்யவர்த் கடியான் கஜகஸ்தானின் இப்ராகிமோவ் மமெத்திடம் வெண்கலப்பதக்கத்தை இழந்தார்.

மகளிர் 55 கிலோ பிரீஸ்டைல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வின் பபிதா குமாரி, ஜப்பானின் சவோரி யோஷிடாவிடம் தோல்வியடைந்தார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியிலும் அவர் தோல்வியுற்றார். ஆடவர் வாலிபால் போட்டி பிளே ஆப் சுற்றில், இந்திய அணி தென்கொரியாவிடம் 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியுற்றது.

SCROLL FOR NEXT